ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஆலியா பட்டின் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
கரோனா ஊரடங்கினால் தடைப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ‘ஆர்.ஆர்.ஆர்’ வெளியாகவுள்ளது. இந்தப் படத்திலிருந்து ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இருவரது கதாபாத்திரத்தின் தோற்றம் மற்றும் வீடியோ ஆகியவை ஏற்கெனவே வெளியாகின.
இன்று (மார்ச் 15) ஆலியா பட்டின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் அவர் நடித்துள்ள சீதா கதாபாத்திரத்தின் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவரை ஆலியா பட்டுக்கு லுக் டெஸ்ட் மட்டுமே எடுத்துள்ளது படக்குழு. விரைவில் ஆலியா பட் காட்சிகளின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெரும் போட்டிக்கு இடையே கைப்பற்றியுள்ளது. உலகமெங்கும் அக்டோபர் 13-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’.
‘ஆர்.ஆர்.ஆர்’ அப்டேட்: ஆலியா பட் தோற்றம் வெளியீடு
