எங்கே எங்கள் டிவனியா எங்கே எங்கள் விமல்ராஜ் என்ற குரல் நேற்று வரை வடக்கின் குரலாக இருந்தது இன்றோ உலகத் தமிழினத்தின் ஒருமித்த குரலாக மாறியிருக்கிறது. ஐயோ.. பாலூட்டும் தாய்கூட பயந்து நடுங்கி தன் மார்பகங்களை மூடியபடி அச்சத்துடன் வாயிலை பார்க்க வேண்டிய நாள் வந்ததே என்பதுதான் இந்த கைதுகளுக்காக நாம் தரும் கலக்கம் கலந்த விளக்கம்.
பாதாளக்கிணற்றில் விழுந்த குழந்தையின் பரிதாப நிலைதான் இன்று இந்த இருவருக்குமே ஏற்பட்டிருக்கிறது. அந்தோ தெய்வமே.. பாதாளக்கிணற்றில் விழுந்தால் விழுந்த குழந்தையின் முனகலாவது கேட்குமே.. இது விழுந்து கிடக்கும் இடமே தெரியாத பாதாள சிறையாக இருக்கிறதே என்று பதைபதைத்து தவிக்கிறதே மனம்.
அன்று இராவணனால் கடத்தி வரப்பட்டு சிறை வைக்கப்பட்ட சீதையை பாடிய கம்பனுக்கு அவள் சிறையிருந்த அசோக வனமாவது தெரிந்திருந்தது. இன்று அவன் இருந்திருந்தால், இந்த நிகழ்வை பார்த்திருந்தால் பாவம் டிவனியா இருப்பது எந்த வனமென்றே தெரியாது கலங்கியிருப்பானே..
கம்பன் ஏன்.. கொரோனா தந்த முகக்கவசம் கூட இன்று நமது கருத்து சுதந்திரத்தை கூறாது தவிர்க்கும் ஒரு கருவியாகத்தானே இங்கு பயன்படுகிறது. கொரோனாவே உன் ஊமை முகக்கவசத்தால் தானே.. இன்றும் இங்கு பலர் கைதாகாமல் இருக்கிறார்கள்.. நன்றி கொரோனாவே.
உலகெல்லாம் பரவிய கொரோனாவே, நீ கூட போக முடியாத இடத்தில் அவர்கள். இந்த நிமிடம்வரை அவர்கள் நீதிமன்று கொண்டு வரப்படவில்லை. கைது செய்வதில் அதிரடி வேகம் காட்டியவர்கள் அதுபோல அடுத்த கட்ட பணிகளையும் செய்யாதது ஏன் என்றும் தெரியவில்லை.
போர் நடைபெற்ற காலத்தில் கூட இப்படியொரு பயங்கரவாத சட்டம் இருந்ததில்லை என்று கூறுவதா..? கடந்த மாசி மாதம் மாற்றப்பட்ட பயங்கரவாத தடை சட்டம் பற்றி சாதாரண மக்களுக்கு தெரியுமா என்று கேட்டு அழுவதா..? இந்த நாட்டில். கைதாகி, கைதாகி கற்க வேண்டிய பாடமா சட்டம். வாக்களித்த தலைவர்களுக்கே விளங்குமா இந்த சட்டம் என்று கேட்டழுவதா..? சிறையில் இருக்க வேண்டியவர்களை எல்லாம் கைது செய்யாது இந்த சட்டம் விலக்களித்தது எப்படி..? இனியும் கேட்காமல் இருக்க முடியவில்லை.
சீனாவினால் கொங்கொங் ஜனநாயகக் குரல்வளையை நெரிக்க கொண்டு வரப்பட்ட இரும்புச் சட்டம் ஆசியாவில் உள்ள ஏழை நாடுகளிலும் கரு நிழலாக பரவும் என்று உலக ஜனநாயக நாடுகள் சொன்னது இப்போதுதான் காலதாமதமாக காதுகளில் கேட்கிறது. அட போங்கடா..? இங்கு எந்த சட்டம் வந்தாலும் தட்டிக்கேட்க தமிழனிடம் என்ன உரிமை இங்கே இருக்கிறது..? உலக ஜனநாயக தலைவர்களே.. உங்களை பார்த்து சிரிக்கிறான் தமிழன். நீங்கள் இழைத்த தவறுதானே தமிழனின் கண்ணீர் என்பதை இனியாவது அறிவீர்களா..?
சிங்களவராக மாறி, சிங்களம் பேசி, புத்தமதம் மாறினால் கூட நாம் நின்மதியாக வாழ முடியுமா என்றால் அதுவும் கிடையாது. இங்கு மாறியவர்கள் பலர் பாவம் அவர்களுக்கும் இங்கு சிறைதான் என்பதை அறிந்து வெட்கி, ஒடுங்கிக் கிடக்கிறார்கள் என்பது உலகம் அறியாத இரகசியம். இல்லையானால் இன்று அவர்களுடைய குரலாவது கேட்டிருக்குமே எண்ணிப்பார்..?
போர் முடிந்துவிட்டதுதானே காணாமல் ஆக்கப்பட்டவன் எவருமே உயிருடன் இல்லையாமே என்ற கதை வந்து ஓய்ந்துவிட்டது. இந்த நாட்டில் இனியாவது அப்படி நடக்காது என்று தமக்கு தாமே சமாதானம் சொல்லி, எஞ்சிய பிள்ளைகளாவது நின்மதியாக வாழும் என்று கருதிய தமிழ் பெற்றோர் மீண்டும் வயிற்றில் நெருப்பை கட்டிபடி அன்றாட வாழ்வை கழிக்க வேண்டியுள்ளதே.. தெய்வமே இது நீதியா.. ஒரு தாயின் குரல் வான் வெளியில் கலக்கிறது.
இந்த கைது டிவனியா, விமல் என்ற இரண்டு ஊடகவியலாளர் கைதல்ல, உலக மனித உரிமைக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் போடப்பட்ட வாய்ப்பூட்டு. ஒட்டு மொத்த தமிழினமும் கலங்க வேண்டிய நிலை வந்துள்ளது. வீர முழக்கமிடும் தமிழக தேர்தல் தலைவர்கள் கூட நம் ஈழப் புகழ் தமிழ் தலைவர்கள் போல தேர்தல் நீரோட்டத்தில் மூழ்கிவிட்டார்கள் என்ன செய்ய..
இதுதான் யதார்த்தம்.. இந்த இக்கட்டான நிலையில் இங்கு என்னதான் நடக்கிறதென விடையோ விளக்கமோ சொல்ல முடியாது ஒருவர் முகத்தை ஒருவர் பேயறைந்தது போல பார்த்து நிற்கின்றோம். இந்த ஊமை மௌனத்தை உடைத்துவிட டிவன்யா உன் வீரக்குரல் கேட்காதா, விமல் ராஜே உன் தன்னம்பிக்கை மொழி காதுகளில் கேட்காதா..? தவிக்கிறாள் தமிழ் தாய்..
விமல் அண்ணா நீங்கள் தந்த மிதி வண்டியில் போகும் போதெல்லாம் உங்களை தேடி அழுகிறேன் என்று ஒரு பாடசாலை மாணவன் கூறுகிறான். கண்ணிழந்த தாய் ஒருத்தி தம்பி என்னை சாகும்வரை காப்பேன் என்றாயே நீ எங்கே என்று அழுகிறாள்.
குளிக்க கிணறும், குடியிருக்க ஒரு குடிசையும், கூனி குறுகி இயற்கை உபாதையை அடக்கி இடமில்லா பொது கழிவறையில் வரிசையில் நின்ற பெண்களுக்கு சொந்தமாக ஒரு கழிவறையும் அமைத்துத்தர நாளை வருகிறேன் என்று சென்ற டிவனியா அக்கா நீ எங்கே என்று அழுகின்றனர் பாதிக்கப்பட்ட பெண்கள்.
அதிகாரம் உள்ள பெரும்பான்மை சகோதரர்களே இவர்கள் உங்களுக்கு என்ன அநியாயம் செய்தார்கள்.. பசித்த மக்களுக்கு ஒரு பிடி சோறு போட்டவன் பயங்கரவாதியா..? அழுத கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொன்ன இளம் தாய் பயங்கரவாதியா..? அவர்கள் உங்களிடம் வடக்கை கேட்டார்களா..? இல்லை கிழக்கை கேட்டார்களா..? நீங்கள் கட்டும் புத்தவிகாரைகளை இடித்தார்களா..? கேரள கஞ்சா கடத்தினார்களா..? வீடுகளை உடைத்து களவெடுத்தார்களா..? உங்களிடம் ஒரு தொட்டு நக்கும் சுண்ணாம்பாவது கேட்டார்களா.. இல்லையே..?
இந்த நாட்டின் பட்டினியை ஒழிப்போம், ஏழ்மையை விரட்டுவோம், ஐயா சாமி.. போதும் போதும் இனியாவது தமிழர், சிங்களவர், முஸ்லீம் என்ற பேதம் வேண்டாமென வாழத் தலைப்பட்டது குற்றமா..?
தமது நல்லலெண்ணத்தை காட்ட சிறிலங்கா சுகாதார அமைச்சுக்கு கேட்டவுடன் கொரோனா முகக்கவசம் துவைக்க 20 சலவை இயந்திரங்களை தந்தது குற்றமா..? மலையகத்தில் நூறு வீடுகளுக்கு கூரை போடுங்களென உங்கள் தொழில் அமைச்சர் கேட்டபோது ஓடிவந்து நூறு வீடுகளுக்கு கூரை போட்டு கொடுத்தது பயங்கரவாதமா..? மன்னாரில் வெள்ளத்தில் சிக்குண்ட முஸ்லீம் மக்களின் கண்ணீர் துடைத்தது பயங்கரவாதமா..? இதையெல்லாம் செய்தவர்களை பயங்கரவாத படை அமைத்து பல இலட்சம் செலவழித்து துடிக்க துடிக்க கைது செய்து அவமானப்படுத்துவதா பௌத்தம் காட்டும் நல்லொழுக்கம்..?
மக்கள் வரிப்பணத்தை இப்படி ஏன் செலவு செய்ய வேண்டும்.. ஒரு போனில் அடைத்திருந்தால் தாமாக நாலாம் மாடிக்கே வந்திருப்பார்களே..? இங்கு உயிரோடு இருந்தென்ன இறந்தென்ன என்ற வாழ்க்கை வாழும் எம்மை பிடிக்க ஏன் படையினர் ஏன் துப்பாக்கி..? உங்களை பார்த்து கேட்கிறது எம் நீதியுள்ள இதயம்.
உலக மனித உரிமைக்கவுண்சிலே உனக்கு கண் இல்லையா.. முதல் தடவை கைதானதும் யாழ் மனித உரிமை கவுண்சிலுக்குத்தான் போளாள் டிவனியா.. அவள் முறைப்பாட்டை பதியாது விரட்டியடித்ததுதான் யாழ்ப்பாண மனித உரிமைகள் கவுண்சில் என்பதை உங்கள் கவனத்திற்கு பகிரங்கப்படுத்துகிறோம் மிச்சேல் பாச்லட் அம்மையாரே. முறைப்பாடுகளை பதியாது மக்களை விரட்டி, வடக்கில் வசந்தம் வீசுகிறது என்று உங்கள் காதில் பூ சுற்றத்தான் யாழில் மனித உரிமை கவுண்சிலின் பணியா..? இதுதான் இங்கு மனித உரிமை கவுண்சில் மறந்துவிடாதீர்கள் அம்மையாரே. இங்கு மனித உரிமை மீறல்கள் ஏன் பதிவாகுவதில்லை என்ற உங்கள் கேள்விக்கும் இதுதான் பதில். உங்கள் சம்பளம் இங்கு விழலுக்கு இறைத்த நீர்தான்.
இந்த கடிதத்தின் நிறைவாக ஒரு கேள்வி.. இந்த மண்ணில் இளைஞர் நீதியாக, அமைதியாக, மகிழ்வாக வாழ முற்பட்டால் வடக்கின் அனைத்து அரசியல் தலைமைகளுக்கும் அது பிடிக்காமல் இருக்கும் மர்மம் என்ன..? தமிழனில் ஒற்றுமை இல்லை என்கிறீர்களே ஒருவனை வளரவிடாது தடுப்பதில் உங்களுக்குள்ள ஒற்றுமையை மற்ற இடங்களில் காட்ட ஏன் தயங்குகிறீர்கள்.
உங்கள் வீடு தேடி வந்தால் ஐயோ பயங்கரவாத சட்டம் ஆளைவிடடா சாமி என்று ஓடும் நீங்கள் ஏன் வட்டுக்கோட்டையில் நின்று ஈழம் கேட்டீர்கள்..? இதையெல்லாம் பார்த்து மௌமாக இருக்கும் தலைவர்களே பார்தீர்களா..? இந்த கைதின் மூலம் உங்கள் முகமூடியையும் சிறீலங்கா இராணுவம் கிழித்துவிட்டதே. இப்போது என்ன சொல்லப்போகிறீர்கள்..? 72 வருடங்களாக உங்களுக்கு போட்ட புள்ளடிகளை அடுக்கினால் அது சந்திரமண்டலத்தையும் தொட்டுவிடும், ஆனால் அதனால் மக்களுக்கு கிடைத்த பயன் பூஜ்ஜியமாக இருக்கிறதே.. தமிழ் மக்களுக்கு தலைமைதாங்க வந்த தலைவர்களே நீங்களும் கற்சிலைகளாக இருந்தால் தெய்வமாகிவிடலாமென்று நினைக்கிறீர்களே மகிழ்ச்சி.. அப்படியே இருங்கள்..
சிறிலங்கா அரசே எங்கள் குரலை கேளுங்கள்.. டிவனியா, விமல்ராஜ் இருவரையும் உடன் விடுதலை செய்யுங்கள்.. உங்கள் செயலால் தமிழினம் முழுவதுமே சிறையில் இருப்பது போல வருந்துகிறது.
இப்படிக்கு
இதயமுள்ள தமிழன்..
02.04.2021