‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் உரிமைகள் விற்பனை, பல்வேறு முன்னணி பாலிவுட் நடிகர்களின் வியாபாரத்தையெல்லாம் தாண்டியுள்ளது.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆலியா பட் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்படவில்லை. ‘பாகுபலி’ படங்களின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு ‘ஆர்.ஆர்.ஆர்’ வெளியாவதால் இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதனால், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் உரிமைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இதன் தமிழக உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளதால் இதர உரிமைகளுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே, இந்தப் படத்தின் அனைத்து மொழி தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தைக் கைப்பற்ற கடும் போட்டிகள் ஆரம்பத்திலிருந்தே நடைபெற்று வந்தன. தற்போது அதை ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சுமார் 325 கோடி ரூபாய்க்கு அனைத்து உரிமைகளையும் கைப்பற்றி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒரு படத்தின் உரிமம் இந்த அளவுக்கு விலைபோனது இதுவே முதல் முறை என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள். இதர மொழி விநியோக உரிமைகள், இசை உரிமை உள்ளிட்ட உரிமைகளை விற்றால் படம் வெளியீட்டுக்கு முன்பான வியாபாரம் 800 கோடி ரூபாயைத் தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வியாபாரம் பல்வேறு முன்னணி பாலிவுட் நடிகர்கள் படத்தின் வியாபாரத்தை எல்லாம் பலமடங்கு தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.