அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ படத்தின் வெளியீட்டில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால் ‘வலிமை’யின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிடும்.
இதுவரை அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. அனைத்துத் தகவல்களையுமே படக்குழு மிகவும் ரகசியமாக வைத்துள்ளது. மே 1-ம் தேதி அஜித்தின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதாக இருந்தது.
ஆனால், கரோனா 2-வது அலை தீவிரத்தை முன்வைத்து ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை ஒத்திவைத்தது படக்குழு. இதனால் ரசிகர்கள் மிகவும் சோகமடைந்துள்ளனர். இதனிடையே, வெளிநாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு என்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதனால், வெளிநாட்டில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் படமாக்கத் தாமதமாகும். படத்தின் கதையமைப்புக்கு மிகவும் முக்கியமான காட்சிகள் என்பதால், இதனைப் படமாக்காமல் படத்தையும் இறுதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ‘வலிமை’ வெளியீட்டில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.முதலில் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீடாக இருந்தது. தற்போது அதிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு தீபாவளி வெளியீடு சரியாக இருக்குமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு. அனைத்துமே இந்த கரோனா 2-வது அலை தீவிரம் குறையும்போது முடிவாகும் எனக் கூறப்படுகிறது.
‘வலிமை’ படத்துக்குப் பிறகு, அஜித் நடிக்கவுள்ள படம் குறித்து இன்னும் எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
‘வலிமை’ வெளியீட்டில் மாற்றம்?
