சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வாழ்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான படம் ‘அருவி’. 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தப் படம் வெளியானது. முதன்மைக் கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடித்தார். அஞ்சலி வரதன், கவிதாபாரதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.
சிவகார்த்திகேயனின் உறவினர்தான் அருண் பிரபு புருஷோத்தமன். தனது அடுத்த படத்துக்காக முயன்று கொண்டிருந்தவருக்கு, தனது தயாரிப்பிலேயே படம் இயக்கும் வாய்ப்பை வழங்கினார் சிவகார்த்திகேயன். ‘அருவி’ படம் போலவே, முற்றிலும் புதுமுகங்களை வைத்து ‘வாழ்’ என்னும் படத்தை இயக்கினார்.
2019-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட இந்தப் படம், ஜூலை 15-ம் தேதி முடிந்தது. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ‘வாழ்’ படத்தைப் படமாக்கியுள்ளார் அருண் பிரபு புருஷோத்தமன். இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்து, தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியாக, ஓடிடியில் ‘வாழ்’ வெளியாகவுள்ளது. சோனி லைவ் நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓடிடியில் வெளியாகிறது ‘வாழ்’?
