தமிழில் சோனி லைவ் ஓடிடி அறிமுகமாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு தொடங்கிய உடனே, இந்தியாவில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பல்வேறு படங்கள் வெளியிட முடியாமல் முடங்கின. இந்தச் சமயத்தில்தான் இந்தியாவில் ஓடிடிக்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகின.
வீட்டிலிருந்தவாறே புதிய படங்களைக் கண்டு ரசிக்கத் தொடங்கினார்கள். இதனைப் பயன்படுத்தி பல்வேறு புதிய நிறுவனங்களும் ஓடிடி தளத்தைத் தொடங்கின. முழுமையாகத் தயாராகி திரையரங்கில் வெளியிட முடியாமல் இருக்கும் படங்களை, ஓடிடி நிறுவனங்கள் கைப்பற்றி நேரடியாக டிஜிட்டலில் வெளியிட்டன.
அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், சூர்யா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின. இதில் அமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட், சோனி லைவ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கிடையே படங்களின் உரிமைகளைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவின.
இதில் சோனி லைவ் ஓடிடி தளம் தமிழில் தொடங்கப்படாமல் இருந்தது. விரைவில் தமிழில் தொடங்குவதற்கு ’நரகாசூரன்’, ’கடைசி விவசாயி’ உள்ளிட்ட பல படங்களைக் கைப்பற்றி வந்தது சோனி லைவ் ஓடிடி தளம். ஆனால், எப்போது தொடங்கப்படும் என்பதே தெரியாமல் இருந்தது.
தற்போது ஜூன் 25-ம் தேதி முதல் தமிழில் சோனி லைவ் ஓடிடி தளம் களமிறங்குகிறது. இதில், விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற ‘தேன்’ திரைப்படம் முதலில் வெளியாகவுள்ளது. அதற்குப் பிறகு ஜூலை மாதத்தில் ‘நரகாசூரன்’, ’கடைசி விவசாயி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
தமிழில் சோனி லைவ் ஓடிடி அறிமுகமாகும் தேதி அறிவிப்பு
