கொரோனா அச்சுறுத்தலால் திரைத்துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய பட்ஜெட் படங்கள் உட்பட பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக மலையாளத்தில் ‘த்ரிஷ்யம் 2’ ‘ஜோஜி’ உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. இதனை கருத்தில் கொண்டு மலையாள சினிமாவுக்கென பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஓடிடி தளம் வரும் நவம்பர் 1ஆம் தேதி அன்று அறிமுகமாகிறது.
இந்நிலையில் கேரள அரசின் இந்த் அறிவிப்பை இயக்குநர் சேரன் வரவேற்றதோடு தமிழ் மொழிக்கும் தனி ஓடிடி தளம் அவசியம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும். சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவு காலம். அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம். தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் அவசியம்.
இவ்வாறு சேரன் கூறியுள்ளார். இந்த பதிவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோரது ட்விட்டர் பக்கங்களையும் சேரன் டேக் செய்துள்ளார்.
தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் அவசியம்
