ரஜினி நடிக்கவுள்ள ‘தலைவர் 169’ படத்தின் தயாரிப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சிவா இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வருகிறார்.
‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இது ரஜினி நடிப்பில் உருவாகும் 168-வது படமாகும். இதனைத் தொடர்ந்து 169-வது படத்தின் இயக்குநர் யார் என்று பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமிருந்தன.
இறுதியாக, இந்தப் படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இவர் கூறிய கதை மிகவும் பிடித்திருந்ததால் ரஜினி உடனே ஒ.கே சொல்லியிருக்கிறார்.
இந்தப் படத்தை முதலில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயங்கியுள்ளது. இறுதியில் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டது.
தற்போது ரஜினி தனது 169-வது படத்தின் தயாரிப்பு பொறுப்பிற்கு லைகா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கதை, பட்ஜெட், படப்பிடிப்பு உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து லைகா நிறுவனம் ஆலோசனையைத் துவங்கியுள்ளது.விரைவில் அனைத்து முடிவானவுடன், ஒப்பந்தமாகக் கையெழுத்தாகி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
‘தலைவர் 169’ அப்டேட்: தயாரிப்பாளர் மாற்றம்?
