புதிய படங்கள் வெளியீடு தொடர்பாக, புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் தயாராகி வந்த புதிய படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் குறைந்து ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், ஓடிடியில் வெளியான படங்களை 4 மாதங்கள் கழித்து, திரையரங்குகளில் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று ஓடிடி நிறுவனங்கள் கூறியிருந்தன. இதனை முன்வைத்து ‘சூரரைப் போற்று’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியிட ஆர்வம் காட்டியது. மேலும், இதன் வெளியீட்டில் வரும் பணத்தை அப்படியே திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.
இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தார்கள். இறுதியாக சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். என்னவென்றால், ஓடிடியில் வெளியான படத்தை எந்தவொரு காரணத்தைக் கொண்டும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளனர்.மேலும், ஓடிடி வெளியீட்டுப் படங்களின் ஸ்பெஷல் காட்சிகளுக்குத் திரையரங்குகளைக் கொடுப்பதில்லை என்றும் தீர்மானித்துள்ளனர். அதேபோல், திரையரங்குகளில் வெளியாகும் படத்தை 4 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும். இந்த முடிவுக்குச் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே திரையரங்குகளில் சம்பந்தப்பட்ட படத்தை வெளியிடுவது எனவும் முடிவு செய்துள்ளனர்.
திரையரங்க உரிமையாளர்களின் இந்த முடிவினால், ‘சூரரைப் போற்று’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது.
திரையரங்க உரிமையாளர்கள் புதிய முடிவு
