முத்தையா முரளிதரன் பயோபிக் திரைப்படத்தில் நடிகர் தேவ் படேல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படமொன்று உருவாகவுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இப்படத்துக்கான பணிகள் தள்ளிக்கொண்டே போனது.
‘800’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் முதலில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. ஆனால், சமூக வலைதளங்களில் எழுந்த தொடர் எதிர்ப்பலை காரணமாக, அப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். அதன் பிறகு இப்படம் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வந்தது.
இந்நிலையில், தற்போது இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் மூலம் பிரபலமான தேவ் படேல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.
மீண்டும் தயாராகும் முத்தையா முரளிதரன் பயோபிக்
