பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என அழைக்கப்படும் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர், சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.12 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 92.
லதா மங்கேஷ்கரின் மறைவு நாடு முழுவதும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1929-ம் ஆண்டு மத்திய பிரதசம் மாநிலம் இந்தூரில் பிறந்த லதா மங்கேஷ்கர், தனது 13-வது முதல் முதல் பாடலை பாடி இசைத்துறையில் அறிமுகமானார்.
இந்திய இசை உலகில் தனது இனிய குரலால் தனி ராஜ்ஜியம் நடத்திய லதா மங்கேஷ்கர், இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பத்ம விபூஷன், தாதா சகேப் பால்கே, பாரத் ரத்னா உள்ளிட்ட பல்வேறு கவுரவங்களை அவர் பெற்றுள்ளார்.
அவரது மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்ததாகவும், நிரப்ப முடியாத வெற்றிடத்தை லதா மங்கேஷ்கர் விட்டு சென்றுள்ளார் என்றும் பிரதமர் மோடி தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்டோர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மராட்டிய மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மேலும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் எனவும், நாடு முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.