பிரபாஸுடன் நடிப்பதில் தனக்கு பெருமிதம் என்று நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளர்.
‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்திய அளவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் பிரபாஸ். தற்போது ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் ‘ராதே ஷ்யாம்’ அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் மார்ச் 11 அன்று ரிலீஸாகிறது. நாக் அஸ்வின் இயக்கிவரும் படத்தில் பிரபாஸுடன் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் நடிக்கின்றனர். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.
இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு நேற்று (பிப். 18) தொடங்கியது. இதில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் “முதல் நாள்.. முதல் ஷாட்.. ‘பாகுபலி’ பிரபாஸுடன் முதல் படம். அவருடைய ஆரா, திறமை மற்றும் அதீத பணிவு ஆகியவற்றுடன் பணிபுரிவதில் எனக்கு பெருமிதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமிதாப் பச்சனின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தன்னுடைய கனவு நனவாகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரபாஸுடன் நடிப்பதில் பெருமிதம் – அமிதாப்
