அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்துள்ளது.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம், கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு நாளை (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் ‘வலிமை’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து திரையங்குகளில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து இந்த ஆண்டின் முதல் பெரிய ஓபனிங் உடன் களமிறங்கியிருக்கிறது ‘வலிமை’. பொதுவாகவே பெரிய நடிகர்கள் படங்களின் முதல் நாள் முதல் காட்சி ஒரு திருவிழாவைப் போல தமிழகம் முழுவதும் களைகட்டும். பிரம்மாண்ட கட் அவுட், பாலாபிஷேகம், ரசிகர்களின் வைரல் பேட்டிகள் என அன்று முழுவதும் சமூக வலைதளங்கள் கலகலக்கும்.
அந்த வகையில் ‘வலிமை’ படத்துக்கான முதல் நாள் முதல் ஷோவுக்கான டிக்கெட் புக்கிங் எதிர்பார்த்ததை விட அதிகளவில் நடந்துள்ளதாக சென்னையின் பிரபல திரையரங்கங்களின் உரிமையாளர்கள் பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், முதல்முறையாக தமிழகத்தில் ஏறக்குறைய 1000-க்கும் அதிகமான திரைகளில் ‘வலிமை’ வெளியாகிறது.
கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான திரைப்படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. அப்போது கரோனா பரவல் அதிகமாக இருந்ததால் 50% பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டனர். தற்போது அந்தக் கட்டுப்பாட்டை தமிழக அரசு தளர்த்தியுள்ளது. மேலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகும் ஒரு பெரிய நடிகரின் படம் என்பதால் திரையரங்க உரிமையாளர்களுக்கு ‘வலிமை’ புக்கிங் சாதனை ஒரு பெரும் உத்வேகத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
பிரபல டிக்கெட் புக்கிங் தளமான ‘புக் மை ஷோ’-வில் இதுவரை இல்லாத அளவுக்கு ‘வலிமை’ படத்துக்கு இரண்டு மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன. இதுதான் அத்தளத்தில் திரைப்படங்களுக்கு கொடுக்கப்பட்டதில் அதிக லைக்குகள் என்று கூறப்படுகிறது.
டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைக்கும் ’வலிமை’
