சர்வதேச நாடுகளுடன் பல கலந்துரையாடல்களை மேற்கொண்ட போதும் நானோ, ஐக்கிய மக்கள் சக்தியோ நாட்டை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடவில்லை. ஜெனிவாவில் நாட்டை காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகிகள் நாமல்ல என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் பாராளுமன்றத்தில் நேற்று, நாட்டில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பாகவும் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை தொடர்பாக அவர் வினா எழுப்பினார். இதற்கு பதிலளிக்க முற்பட்ட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர, ஜெனீவா மனித உரிமை பேரவை நடைபெற இருக்கும் இவ் வேளையில், ஜெனீவாவில் நாட்டை காட்டிக்கொடுக்கும் நோக்கிலே இந்த நேரத்தில் இவ்வாறான கேள்வி எழுப்படுவதாக தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஊடகவிலாளர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குறை தொடர்பாக ஜெனிவா மனித உரிமை பேரவையை இலக்குவைத்து நாம் குறிப்பிடவில்லை.
எமது ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு முறையாக நடவடிக்கை எடுக்காமல், ஜெனீவாவை இலக்குவைத்து பேசுவதாக தெரிவிப்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. நாங்கள் சர்வதேச தலைவர்களுடன் கலந்துரையாடும்போது நாட்டை காட்டிக்கொடுக்கும் வகையில் கலந்துரையாடியதில்லை.
நாம் கேள்வி எழுப்பினால் அதனை ஜெனீவாவுடன் தொடர்புபடுத்த வேண்டாம். தேசத்துரோக நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.