பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிரப்பு தெரிவித்தும் அரசாங்கத்தினை வெளியேற கோரியும் ஆயிரம் தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக இன்று (06) மலையகப் பகுதிகளில் அனைத்து சேவைகளும் இடம்பெறவில்லை. இதனால் நகரங்கள், தோட்டங்கள் மயான அமைதி நிலவின.
பொது போக்குவரத்து மற்றும் பாடசாலை சேவைகள் இடம்பெறாததன் காரணமாகவும், பாடசாலைகளில் அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்தன.
தபால், வங்கி, புகையிரத சேவைகள் ஆகியனவும் இடம்பெறவில்லை. தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் பூட்டப்பட்டிருந்தன. மலையக நகரங்களில் உள்ள அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்பட்டிருந்தன. எனினும் சதொச வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. எனினும் அரசி பருப்பு சீனி உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தக நிலையத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர்.
வாகன போக்குவரத்து இல்லாததன் காரணமாகவும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததன் காரணமாகவும் நகரங்களில் சன நடமாற்றமும் மிக குறைவாகவே காணப்பட்டன.. பெரும்பாலான நகரங்கள் வெறிச்சோடி போய் கிடந்தன.
ஹட்டன் பகுதியில் பொது போக்குரவத்தில் ஈடுபடும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை எனினும் ஒரு சில தனியார் பஸ்களும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்மான பஸகளும் சேவையில் ஈடுப்பட்டிருந்தன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து எரிபோருள், எரிவாயு, மண்ணெண்ணை, அரசி, சீனி, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்து வருவதுடன் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு பொது மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த 25 ஆம் திகதி மற்றும் 28 ஆம் திகதிகளில் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டு தொழிற்சங்க நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
எனினும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்போ அல்லது அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்களின் வரிசைகளோ குறையவும் இல்லை, அரசாங்கம் பதவி விலகவும் இல்லை. இதனால் மக்கள் மேலும் மேலும் துன்ப நிலைக்கே தள்ளப்பட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதனால் இன்று சுமார் 1,000 தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தப்போராட்டத்திலும் ஹர்த்தால் நடவடிக்கையிலும் ஈடுப்பட்டுள்ளன.
குறித்த ஹர்த்தால் நடவடிக்கை காரணமாக பெருந்தோட்டத்துறை முற்றாக செயலிழந்தன. தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாது ஆங்காங்கே விலை அதிகரிப்பிற்கும், அரசாங்கத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஒரு சில தோட்டங்களில் மாத்திரம் குறிப்பிட்ட ஒரு சில தொழிலாளர்கள் மாத்திரம் சேவைக்கு சென்றிருப்பதாகவும் அதிகமானவர்கள் இன்று சமூகமளிக்கவில்லை என்று தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்தன.