பிரிட்டன் பிரதமராகும் வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்புகளில் லிஸ் ட்ரஸ்க்கு 90% உடன் முன்னிலை வகிக்கிறார். இந்திய வம்சவாளியான ரிஷி சுனக்கின் வெற்றி வாய்ப்பு வெறும் 10% மட்டுமே என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். சொந்தக் கட்சிக்குள்ளயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தல் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சாவளியுமான ரிஷி சுனக்கும், முன்னாள் வெளியுறவு அமைச்சரான லிஸ் ட்ரஸ் ஆகியோர் உள்ளனர்.
தேர்தல் இறுதி முடிவுகள் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், லிஸ் ட்ரஸ்ஸுக்கு பிரிட்டனின் பிரதமராகும் வாய்ப்பு 90% இருப்பதாக, அங்கிருந்து வரும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கருத்து கணிப்புகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்குக்கு 10% மட்டுமே வெற்றி வாய்ப்பு இருப்பதாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.இதுகுறித்து அரசியல் நிபுணரான மெத்யூ கூறும்போது, ”ரிஷி நன்றாக பிரச்சாரம் செய்கிறார். ஆனால் ட்ரஸ் சிறப்பாக செயல்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணுகின்றனர்” என்றார்.
கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ரிஷி சுனக் கூறும்போது, “கருத்துக்கணிப்புகள் நான் பின்தங்கி இருப்பதாக கூறுகின்றன. நான் சிறப்பாக செயல்படுவேன். ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். நான் ஒவ்வொரு ஓட்டுக்காகவும் போராடுவேன்” என்றார்.