விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: விநாயகர் சதுர்த்தி என்னும் மங்களகரமான நன்னாளில் தமிழக மக்களுக்கு எனது உளம்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஞானம், அதிர்ஷ்டம், வளம் ஆகியவற்றின் உருவகமாக இருக்கும் விநாயகரின் பிறந்தநாளே விநாயகர் சதுர்த்தி. அவரது ஆசியுடனும் முயற்சிகள் மூலமாகவும் தடைகளின்றி இலக்கை அடைவோம். புத்தம் புது நம்பிக்கையுடன் தொடங்கியிருக்கும் புதிய பயணம், நமது நாட்டுக்கு ஒருங்கிணைந்த வளர்ச்சியை அளிக்கட்டும். அனைவருக்கும் அமைதி, நல்லி
ணக்கம், மகிழ்ச்சி, வளம் போன்றவற்றை வழங்கட்டும்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: விநாயகக் கடவுள் அறிவின், ஞானத்தின், வளமையின் கடவுளாகப் பார்க்கப்படுகிறார். எந்த ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும்போதும் விநாயகரை வணங்கி தொடங்கப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா அனைவரது வாழ்விலும் ஆரோக்கியத்தையும், அமைதியையும், செழிப்பையும் அளிக்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: வேழமுகத்து விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும் என்ற வாக்குக்கு இணங்க விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும், வாழ்வைச் செழிப்பாக்கும் எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை பக்தியுடன் வழிபட்டு, அவர்தம் கருணையால் துன்பங்கள் நீங்கி, இன்பம் பெருகி வாழ்வில் நிறைந்த செல்வமும் நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: வேண்டுவோர்க்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் விநாயகப் பெருமானின் அருளால் அனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும், அன்பும் அமைதியும் நிலவட்டும், நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும், ஒற்றுமை ஓங்கட்டும், இல்லந்தோறும் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: கரோனா பேரிடருக்குப் பிறகு மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது. அனைத்து தமிழ் மக்களுக்கும், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: எந்த காரியம் ஆனாலும் விநாயகரை வணங்கி தொடங்கினால் நல்லது நடைபெறும் என்பது ஐதீகம். இந்நாளில் விநாயகரை வழிபட்டு வருங்காலத்தில் நாம் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றியடைய விநாயகரை வணங்குவோம்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: எதில் பிடித்து வைத்து வழிபட்டாலும் அருள் புரிகிற எளிமையின் சிகரமாக இருப்பதே விநாயகரின் சிறப்பு. இந்த நன்னாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும் தழைக்க முழுமுதற் கடவுளான விநாயகரின் அருள் துணை நிற்கட்டும்.
ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி.: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது உளம் கனிந்த, விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகள்.
வி.கே.சசிகலா: சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்லஞான முதல்வனை இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மனமுருக வணங்கி, சதுர்த்தி நாயகனின் அருளைப் பெற்று அனைவருக்கும் வெற்றிகரமான வாழ்க்கை அமையட்டும்.சமக தலைவர் சரத்குமார்: விநாயகர் சதுர்த்தி நன்னாளில் துன்பங்கள் அகன்று இன்பங்கள் பெருகவும், தொழில், வணிக வியாபாரங்களில் தடைகள் நீங்கவும், மக்கள் அனைத்து வளமும், நலமும் பெற்று முன்னேற்றம் காணவும் இறைவன் அருளாசி வழங்கட்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இதேபோல், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், கோகுல மக்கள் கட்சித் தலைவர் எம்.வி.சேகர், தேசிய முன்னேற்ற கழகத் தலைவர் ஜி.ஜி.சிவா, தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய தேசிய லீக் மாநில பொதுச்செயலாளர் ஜகிருத்தீன் அஹமது, எல்ஜேகே தலைவர் நெல்லை ஜீவா ஆகியோரும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
