ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் இலங்கையின் இறையாண்மையை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் அந்த வகையில் அதனை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் மனித உரிமைகளை முன்னேற்றுதல், அவற்றைப் பாதுகாத்தல் மற்றும் மனித உரிமைப் பேரவையுடனான எமது ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் பேணுதல், போன்ற நடவடிக்கைகளில் நாம் உறுதியாக செயற்பட்டு வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் அங்கு உரையாற்றும்போதே வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இவ்வாறு தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இலங்கை மக்கள் மத்தியில் மனித உரிமைகளைப் பேணுதல் மற்றும் அனைவருக்கும் சமத்துவமான முன்னுரிமை வழங்குவதில் எமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. நாம் இன்று உடனடியாக அக்கறை செலுத்த வேண்டிய விடயம் நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி பெறுவதாகும்.
எனது உரையின் ஆரம்பத்தின் போது இலங்கையின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். எமது நாட்டு மக்களின் மனித உரிமைகளை முன்னேற்றுதல், அவற்றைப் பாதுகாத்தல் மற்றும் மனித உரிமைப் பேரவையுடனான எமது ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் பேணுவதென்ற உணர்வுடன் நாம் செயற்பட்டு வருகின்றோம்.
இலங்கையின் அர்ப்பணிப்பை நாம் பேணுவதுடன் 46/1 தீர்மானத்தை திட்டவட்டமாக நிராகரித்து உயர் ஸ்தானிகருக்கு எழுத்துபூர்வமாக அத்தீர்மானத்தை நாம் சமர்ப்பித்துள்ளோம்.
கடந்த கால நிகழ்வுகளை நாம் அவதானித்துள்ளோம். அதுபற்றிய உணர்திறன் கொண்டவர்களாகவும் நாம் உள்ளோம். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிப்புற காரணிகள் இதற்குக் காரணமாகும். இவை எமக்கு பல பாடங்களைக் கற்பித்துள்ளன.
இலங்கை தற்போது எதிர்கொள்கின்ற சமூக பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு மக்களின் அசௌகரியங்களைப் போக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதன் மூலம் அவர்களது இயல்பு வாழ்க்கைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சர்வதேச நிதியத்தின் உதவிகள் மற்றும் கடன் மறுசீரமைப்புப் பற்றிய விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐ.நா முகவர் அமைப்புகளுடன் அரசாங்கம் அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது. பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
சமீப காலமாக இதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கையின் நீண்டகால ஜனநாயகத்தை தொடர்ந்தும் கட்டிக்காப்பதில் எமது நாடு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.
கடுமையான சவால்கள் மற்றும் தடைகள் இருந்த போதிலும், முன்னேற்றத்தைத் தொடருவதில் இலங்கை உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.
மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நல்லிணக்கப்பாட்டைக் கடைப்பிடிப்பதில் இலங்கை உறுதியாக உள்ளது.
46/1 தீர்மானமானது சட்டபூர்வமான தன்மையின் அடிப்படையில் உடன்படவில்லை. அதன் உள்ளடக்கத்தை நாம் வெளிப்படுத்தியுள்ளோம். குறிப்பாக அதன் 6 ஆவது பந்தியானது இலங்கை மக்களின் இறையாண்மையையும், ஐ.நா சாசனத்தையும் மீறுவதாக உள்ளது. இதனை தொடர்வதை திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் அர்த்தமுள்ளதாகவும் நிலையானதாகவும் இருக்கவேண்டும். அதுசம்பந்தமாக நாட்டுடன் அதன் அபிலாஷைகளுடன் இணக்கமாக நீங்கள் செயற்படவேண்டும்.
நாங்கள் நம்பகரமான உண்மையைத் தேடும் பொறிமுறையை நிறுவுவதற்கு முயற்சிக்கின்றோம்.
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தில் முன்னேற்றகரமான திருத்தங்கள் மற்றும் கைதிகள் விடுதலை உள்ளடங்கலாக மேலும் பல பரிந்துரைகள் அதில் உள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.