இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் (வயது 42) தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 200 ஆண்டுகளில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, இளம் பிரதமர் என்ற பெருமையுடன் இந்த பதவியை அலங்கரிக்கிறார்.
ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இங்கிலாந்தின் 57-வது பிரதமராக பதவியேற்க உள்ள சுனக் யார்க்ஷயர் தொகுதியின் எம்.பி.யாக பதவியேற்றபோது, பகவத் கீதையை கொண்டு வந்து பதவியேற்றார்.
அவ்வாறு செய்த முதல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான். தன்னை இந்து என கூறி கொள்வதில் பெருமை கொள்கிறேன் என சுனக் கூறியுள்ளார். இந்தியாவிற்கு வெளியே, அதுவும் இந்தியாவை பல ஆண்டுகள் தங்கள் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்து அரசாங்கத்தில் பிரதமர் ஆக தேர்வாகி உள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை இன்று சந்தித்து பேசுகிறார். இதன்பின்பு, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக சுனக்கை அறிவிக்கிறார்.
இதன்பின்னர், முதன்முறையாக பிரதமராக ரிஷி சுனக் உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி மற்றும் அந்த தம்பதியின் மகள்கள் கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உரையாற்றும்போது, இங்கிலாந்து மக்களுக்காக நான் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உழைப்பேன். நான் நேர்மையுடனும் பணிவுடனும் உங்களுக்கு சேவை செய்வேன் என்று உறுதியளிக்கிறேன் என கூறினார்.
தீபாவளி அன்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு வரலாற்று தருணம் என இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் புகழ்ந்து உள்ளனர்.
அரசர் மூன்றாம் சார்லஸ் உடன் ரிஷி சுனக் இன்று சந்திப்பு
