இந் நாட்டில் பொருளாதார நெருக்கடியால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் தெரிவித்துள்ளது.
குறு மற்றும் சிறு அளவிலான பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் குடும்பச் சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆணையத்தின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய அலுவலகத்தின் தலைவர் மிகிகோ டனாகா தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரனவுடன் கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே மிகிகோ டனாகா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் இலங்கையில் தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் தமது அமைப்பு இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் எனவும் மிகிகோ டனாகா மேலும் தெரிவித்தார்.
தனது அமைச்சும் அரசாங்கமும் ஏற்கனவே மாவட்டங்கள் தோறும் ஒருங்கிணைத்து குறு மற்றும் சிறிய அளவிலான பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன இதன்போது குறிப்பிட்டார்.
இதற்காக கைத்தொழில் அமைச்சினால் பல வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், கிராமிய மட்டத்தில் உள்ள குறு, சிறு பெண் தொழில் முயற்சியாளர்களிடம் சென்று அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து அவர்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார். .