அவதார் பட வரிசைகள் குறித்து ஹாலிவுட் சினிமா இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பதில் அளித்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ வெளிவர உள்ளது.
இது அவதார் பட வரிசையில் இரண்டாவது பாகம் ஆகும். இந்நிலையில், அந்தப் படத்தின் இயக்குநரான கேமரூன் இப்படிச் சொல்லியுள்ளார்.
கடந்த 2009 வாக்கில் வெளியாகி இருந்தது அவதார் படத்தின் முதல் பாகம். இந்தப் படம் உலக அளவில் பலத்த வரவேற்பை பெற்றது.
பாக்ஸ் ஆபிஸில் சுமார் 2.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்திருந்தது. சிறந்த ஒளிப்பதிவு, கலை அமைப்பு மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் என மூன்று பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்றுள்ளது இந்த திரைப்படம்.
இதன் இரண்டாம் பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.
தொடர்ந்து அவதாரின் அடுத்தடுத்த பாகங்கள் 2 ஆண்டுகள் இடைவெளியில் 2028 வரையில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்திருந்தது.
இப்படி இருக்க, இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இப்போது வேறு விதமாக சொல்லியிருக்கிறார்.
நான் இந்தப் படத்தை எழுதிய போதும், இப்போதும் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெருந்தொற்று, ஸ்ட்ரீமிங் தளங்கள் போன்றவை உள்ளன. அனைவரும் திரை அரங்கிற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை இந்தப் படம் கொண்டு வரலாம். ஆனால், இங்கு கேள்வி என்னவென்றால், எத்தனை பேர் இந்த மாற்றத்திற்கு தயாராக இருப்பார்கள் என்பதுதான்.
சந்தை நிலவரமும் அப்படித்தான் உள்ளது. அதனால், அவதார் பட வரிசைகள் மூன்று பாகங்களோடு முடித்துக் கொள்ளும் எண்ணம் உள்ளது. ஆனால், அது பாக்ஸ் ஆபீஸ் (வசூல்) செயல்பாட்டை பொறுத்தே இருக்கும்.
இந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை கூட நம்பிக்கைக்குரிய இயக்குநர் ஒருவரிடத்தில் வழங்கும் எண்ணமும் உள்ளது. நான் சுவாரஸ்யம் நிறைந்த கதை கரு ஒன்றை உருவாக்கி வருகிறேன். ஆனால், என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது” என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
வசூலை பொறுத்தே ‘அவதார்’ அடுத்தடுத்த பாகங்கள்
