உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைத்து கத்தோலிக்க மக்களிடமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்புக்கோரியதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென கத்தோலிக்க திருச்சபை நேற்று அறிவித்துள்ளது.
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் சமூக தொடர்புகளுக்கான தேசிய பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைத்து கத்தோலிக்க மக்களிடமும் மன்னிப்பு கோரியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதியின் மன்னிப்புக் கோரலை கத்தோலிக்கத் திருச்சபை ஏற்றுக்கொள்ளாது என அருட்தந்தை ஜூட் கிரிசாந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: குண்டுத் தாக்குதல் சம்பவம் நடைபெற்று நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
அவருக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஞாபகம் இப்போதுதான் வந்துள்ளது. அவர் அவ்வாறு மன்னிப்பு கேட்க வேண்டுமானால் சம்பவம் இடம்பெற்ற தினத்திலேயே ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
தகவல்கள் கிடைத்திருந்தும் குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம் பெற இடமளித்திருந்தமை பாரிய குற்றமாகும். யுத்த காலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கு இதனை ஒப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்புக் குறித்து கத்தோலிக்க திருச்சபை மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. அதனைப் புரிந்து கொண்டுள்ளதாகவும் அதற்கிணங்க கடவுளின் சார்பில் மன்னிப்பு கோருவதற்கு முன்னாள் ஜனாதிபதி ஒன்றும் கடவுளின் பிரதிநிதியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களினதும் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியுள்ளமையால், அவர் முழு நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் ஜூட் கிரிஷாந்த அடிகளார் மேலும் தெரிவித்துள்ளார்.