கர்நாடக பாஜக அரசு 40% கமிஷன் பெறும் அரசு என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி – 120, பாஜக – 73, மஜத – 25, மற்றவை- 6 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன.
ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம் எனும் நிலையில், அதற்கான வாய்ப்பை காங்கிரஸ் பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வெற்றி குறித்த கேள்விக்கு அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம்.
கர்நாடக பாஜக அரசு 40 சதவீத கமிஷன் அரசு என்ற முழக்கம் காங்கிரஸ் கட்சியால் வைக்கப்பட்டது.
எங்களது இந்த குற்றச்சாட்டை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பாஜகவின் தோல்விக்கு இதுதான் மிக முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.