இந்த வருடம் தீபாவளி பண்டிகையில் சிவகார்த்திகேயனின் அயலான், லாரன்சின் ஜிகர்தண்டா 2 ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர். தற்போது கார்த்தியின் ஜப்பான் படமும் போட்டியில் இணைந்துள்ளது.
இதனால் தீபாவளிக்கு 3 படங்கள் மோதுவது உறுதியாகி உள்ளது. சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா 2 உருவாகி உள்ளது.
இதில் லாரன்ஸ் நாயகனாகவும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். அதிரடி சண்டை படமாக எடுத்துள்ளனர். அயலான் படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கி உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேற்றுக்கிரகவாசி கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது.
படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிந்தும் கிராபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தால் தாமதம் ஏற்பட்டு தீபாவளிக்கு வருகிறது. கார்த்தியின் ஜப்பான் படத்தை ராஜுமுருகன் இயக்கி உள்ளார். இவர் தேசிய விருது பெற்ற ஜோக்கர் படத்தை டைரக்டு செய்தவர்.
இது கார்த்திக்கு 25-வது படம். அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார். படத்தில் கார்த்தியின் வித்தியாசமான தோற்றம் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த தீபாவளி பண்டிகையில் கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்கள் வந்தன. இதில் சர்தார் அதிக வசூல் குவித்தது.
தீபாவளிக்கு மோத வரும் 3 படங்கள்
