பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் கடந்த 1992-ம் ஆண்டு ஆக.15ம் தேதி ரிலீஸ் ஆனது. முதல் படத்திலேயே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த இவரது இசைப் பயணம், அடுத்து ஜென்டில்மேன், கிழக்குச் சீமையிலே, காதலன், பம்பாய் என ஆரம்பித்து ‘மாமன்னன்’ வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம் தெலுங்கு, ஆங்கில படங்களுக்கும் இசை அமைத்துள்ள ரஹ்மான், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக 2 ஆஸ்கர் விருதையும் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடி தந்தவர்.
கோல்டன் குளோப், பாஃப்டா , தேசியத் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ள அவர், சினிமாவுக்கு வந்து 30 வருடம் ஆகிறது.
இதைக் கொண்டாடும் விதமாக, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் முன்னணி திரை பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
சினிமாவில் 30 வருடம்: இசை நிகழ்ச்சி : ஏ.ஆர்.ரஹ்மான்
