தமிழகத்தில்தான் சனாதன தர்மம் உருவானது என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறியில் வந்த தமிழகத்துக்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்துக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என்று திமுக எம்.பி கனிமொழி பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறியில் வந்த தமிழகத்துக்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்துக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்து வருகிறது. அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளைத் தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை.
தமிழ்நாடு என்னும் திராவிடப் பெருநிலம் அவற்றை ஒருநாளும் ஏற்றதுமில்லை.நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி, சிறிது நேரம் அமைதி காக்கவும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் நடந்த ஸ்ரீராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்வில் சனிக்கிழமை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நீங்கள் பலவீனமாக இருந்தால் எதிரிகளால் சூழப்பட்டடிருப்பீர்கள்.
பலமானவர்களாக இருந்தால் நண்பர்கள் இருப்பார்கள்” என்று பேசினார்.
குறிப்பாக, தமிழகத்தில்தான் சனாதன தர்மம் உருவானதாக பல கருத்துகளை முன்வைத்தார். |
——-
“நீங்கள் பலவீனமாக இருந்தால் எதிரிகளால் சூழப்பட்டடிருப்பீர்கள். பலமானவர்களாக இருந்தால் நண்பர்கள் இருப்பார்கள்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் நடந்த ஸ்ரீராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்வில் சனிக்கிழமை கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: “இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் இந்த நிலம் ஒரு புனித பூமி. இங்கிருந்து ஆயிரக்கணக்கான ரிஷிகள், ஞானிகளை உருவாகி மனித குல நன்மைக்காக உழைத்திருக்கிறார்கள்.
இந்த நிலத்தில்தான் சனாதன தர்மம் உருவாகியது. இந்த தர்மம் பாரதம் முழுவதும் பரவியது. பாரதம் என்றால் சனாதன தர்ம இலக்கியங்கள் என்று பொருள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் பாரதம் என்பது இருக்கிறது. பாரதம் என்றால் என்ன, நமது இந்திய அரசியலமைப்பு பிரிவு 1, பாரதம் என்றால் இந்தியா என்கிறது.
இந்தியாவுக்கு அறிமுகம் தேவை’ பாரதத்திற்கு தேவையில்லை. ஏனென்றால் பாரதம் நமது அன்றாட வாழ்வில் அனைவருடனும கலந்தே இருக்கிறது.
இந்த மண் திருமூலர், ராமானுஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற பல ஞானிகளை தந்துள்ளது. அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சனாதன தர்மத்தை கடத்தி வந்திருக்கிறார்கள்.
அவர்களின் தொடர்ச்சியாக 400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்தான் ஸ்ரீராகவேந்திரா. சனாதன தர்மம் நீண்ட தொடர்ச்சியாக இன்றுவரை நம்மிடம் இருந்து வருகிறது. இப்படியான நீண்ட பாரம்பரியத் தொடர்ச்சி உலகில் வேறு எங்கும் கிடையாது.
சிலர் தனது அறியாமையால் சனாதன தர்மம் பிரிவினையை, தீண்டாமையை போதிக்கிறது என்று கூறுகிறார்கள், ஒருபோதும் அப்படி இல்லை. மனிதர்களிடையே பாகுபாட்டை உண்டாக்குவது சனாதனம் இல்லை.
சனாதன தர்மத்தில் தீண்டாமைக்கு இடமில்லை. இந்த மண்ணில் சனாதனம் நீடித்து நிலைத்திருக்கிறது. இங்கிருந்து அந்த ஒளி நாடு முழுவதும் பரப்பப்பட்டிருக்கிறது. இந்த மண்ணில் இல்லாமல் வெளியில் பிறந்தவர்கள் கூட இங்கு வந்து அந்த ஒளியைக் கண்டடைந்திருக்கிறார்கள். நரேந்திரன் இங்கு வந்து ராமகிருஷ்ண பரமஹம்சரால்தான் விவேகானந்தர் ஆனார்.