ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகம்மதிக்கு 2023-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டுப் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருவதற்காகவும், மரண தண்டனைகளை எதிர்த்து மனித உரிமைகள், சுதந்திரத்துக்காக போராடி வருவற்காகவும் அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் மனித உரிமைகள் பாதுகாப்போர் அமைப்பின் Defenders of Human Rights Center (DHRC) துணைத் தலைவராக இருக்கிறார். இந்த அமைப்பு 2011-ல் ஷிரின் எப்பாடியால் நிறுவப்பட்டது. ஷிரின் எப்பாடி 2011-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் விருதை வென்றவர் ஆவார். இருப்பினும், அமைதிக்கான நோபல் விருதை நர்கிஸ் மற்ற விருதாளர்கள் போல் வந்து பெருமிதத்துடன் வாங்க இயலாது. காரணம், நர்கிஸ் இப்போது ஒரு சிறைப் பறவை. அவரது போராட்டங்கள் நீண்ட நெடிய பின்னணி கொண்டது.
நர்கிஸ் முகம்மதி சிறு பிள்ளையாக இருந்தபோது அவரது தாய் அவரிடம் இவ்வாறாகச் சொல்லியுள்ளார். “மகளே, நீ ஒருபோதும் அரசியல் பழகாதே. ஈரானைப் போன்ற அரசியலமைப்பு கொண்ட நாட்டில் அமைப்புகளுக்கு எதிராகப் போராடினால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்”. இவ்வாறு நர்கிஸின் தாய் சொன்னது தீர்க்க தரிசன வார்த்தைகள் போன்று பலித்தேவிட்டது. ஈரான் அரசியல் அமைப்பை எதிர்த்து அரசுக்கு எதிராக நர்கிஸ் கொடுத்த குரல் அவரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியுள்ளது.
நர்கிஸ் ஒரு பொறியியல் நிபுணர். ஆனால் அவர் வேலை பறிபோனது. குழந்தைகள், குடும்பம் பறிபோனது. அவரது கணவர் ஏற்கெனவே ஈரான் அரசால் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். அவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் புகுந்து இரண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார். நர்கிஸ் தனது 16 வயது இரட்டைக் குழந்தைகளின் குரலைக் கேட்டே ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் அவருடைய மகனையும், மகளையும் ஆரத்தழுவி 8 ஆண்டுகள் ஓடிவிட்டன. நர்கிஸ் இன்று நேற்றல்ல 30 ஆண்டுகளாக ஈரான் அரசுக்கு எதிராக எழுதியிருக்கிறார். களத்தில் போராடி இருக்கிறார்.
சிறைக் கனவு: ஈரான் நாட்டின் வடக்குப் பகுதியில் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சிறைச்சாலையில் தான் நர்கிஸ் தற்போது இருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் அங்கிருந்தவாறே தொலைபேசி மூலம் அயல்நாட்டு ஊடகத்துக்குப் பேட்டி அளித்தார். அதில் அவர், “என் அறையின் சாளரத்தின் முன்னால் நான் ஒவ்வொரு நாளும் அமர்கிறேன். அதன் வழியாக வெளியே தெரியும் மலைகளைப் பார்க்கிறேன். அதில் இருக்கும் பசுமை புல்வெளியைப் பார்க்கிறேன். அதைப் பார்த்தவாரே சுதந்திர ஈரானுக்கான கனவைக் காண்கிறேன்.
என்னை அவர்கள் எவ்வளவு அதிகமாகத் தண்டிக்கிறார்களோ, என்னிடமிருந்து எத்தனை எத்தனை உரிமைகளைப் பறிக்கிறார்களோ அந்த அளவுக்கு எனது போராட்டம் வலிமை பெறுகிறது. ஜனநாயகமும், சுதந்திரமும் பெற வேண்டும் என்ற போராட்ட குணம் வலுப்பெறுகிறது” என்று கூறினார். அவருடைய அந்தப் பேட்டி சிறையைத் தாண்டி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அம்மாவின் கதறல்: நர்கிஸ் முகம்மதி ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்தான். அவருடைய தந்தை ஒரு சமையலர் மற்றும் விவசாயி. தாயின் குடும்பத்துக்கு அரசியல் பின்னணி இருந்துள்ளது. 1979-ல் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் அங்கே மன்னராட்சி அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது நர்கிஸின் தாய்வழி மாமன் ஒருவரும் இன்னும் இரண்டு உறவினர்களும் கைது செய்யப்பட்டனர். உரிமைகளுக்காக குரல் கொடுத்ததற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதுதான் அவரின் போராட்டக் குணத்தின் முதல் விதையானது. ஒவ்வொரு வார இறுதியிலும் நர்கிஸ் தனது தாய் சிறையில் உள்ள சகோதரனைப் பார்க்க பழங்களை எடுத்துக் கொண்டு போவதும், தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து ஈரான் அரசு வெளியிடும் மரண தண்டனைப் பட்டியலை பதற்றத்துடன் பார்ப்பதும் அவர் மனதில் ஆழமாகப் பதிந்தது.
ஒருநாள் மதிய வேளையில் நர்கிஸின் தாய் டிவியைப் பார்த்து ஓலமிட்டார். திரையில் தன் தாய்மாமனின் படமும், பெயரும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்துள்ளது. 9 வயதே ஆகியிருந்த நர்கிஸ் மனதில் அந்த மரண ஓலம் பேரலையை உண்டாக்கியது. அன்று தொடங்கியது அவரது மரண தண்டனை எதிர்ப்பு குணம்.
அதைப் பார்த்த நர்கிஸின் தாய், “மகளே, நீ ஒருபோதும் அரசியல் பழகாதே. ஈரானைப் போன்ற அரசியலமைப்பு கொண்ட நாட்டில் அமைப்புகளுக்கு எதிராகப் போராடினால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறினார். ஆனால், மரண தண்டனை கூடாது, மனித உரிமைகள் பேணப்பட வேண்டும், ஈரான் ஜனநாயக நாடாக உருவாக வேண்டும் என்ற குரல்களோடு வேலையை தொலைத்து, கணவர், குழந்தைகளைப் பிரிந்து சிறை சாளரத்தின் ஊடே கனவு கண்டு கொண்டிருக்கிறார்.
நர்கிஸை உரிமைக் குரலைப் பிரதிபலித்த Women, Life, Freedom கோஷம்: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயம். பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்தில் ஈடுபடுவர். கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் இருந்த அவர் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார்.
இதனை எதிர்த்து ஈரான் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. பெண்களும், அவர்களின் வலியை உணர்ந்த ஆண்களும் போராட்டம் களம் கண்டனர். இன்னுயிர் இழந்தனர். கைதாகி பலர் மரணத்தை எதிர்நோக்கியுள்ளனர். அப்போதைய போராட்டக் களத்தில் போராடியவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில் Women, Life, Freedom என்ற கோஷம் இருந்தது. அது போராட்டத்தின் முகமானது. அதனை இன்று தனது எக்ஸ் தளத்தில் நோபல் பரிசு அமைப்பு மேற்கோள் காட்டியுள்ளது. செப்டம்பர் 2022ல் மாஷா அமினிக்கு நீதி கேட்டு நடந்த போராட்டங்களின் கோஷம் நர்ஜின் முகம்மதியின் அர்ப்பணிப்பை, உரிமைக் குரலைப் பிரதிபலிப்பதாகவே அமைந்துவிட்டன என்று சுட்டிக்காட்டியுள்ளது.
சிறையில் ஒலித்த பெல்லா ஸாவ்… – இத்தாலியில் பாசிஸத்துக்கு எதிராக விவசாயிகள், கூலிகள் பாடிய உரிமைப் பாடல்தான் பெல்லா ஸாவ் என்ற பாடல். அந்தப் பாடலின் மெட்டிலேயே பாரசீக மொழியில் ஈரான் உரிமைப் போரில் பங்கேற்கும் பெண்களும் ஒரு பாடல் இயற்றிவைத்துள்ளனர். மாஷா அமினியின் மரணம் தொடர்பான செய்தியை தான் சிறையில் அறிந்து கொண்டது பற்றியும் அதன் பின்னர் சிறையில் நேர்ந்தது பற்றியும் ஒரு தொலைபேசி பேட்டியில் நர்கிஸ் தெரிவித்திருக்கிறார்.
“ஒரு நாள் இரவு தொலைக்காட்சியைப் பார்த்தபோது தான் எங்களுக்கு மாஷா அமினி படுகொலை பற்றி தெரியவந்தது. நாங்கள் அனைவரும் கோபத்தில் வெகுண்டெழுந்தோம். சிறைக்குள் நாங்கள் அந்தச் செய்தியைப் பரிமாறிக் கொண்டோம். ஈரான் இஸ்லாமியக் குடியரசை மரணம் சூழட்டும் என்று கோஷமிட்டோம். எங்கள் கொந்தளிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. அப்போது அக்டோபர் 15-ஆம் தேதியன்று எவின் சிறைக்குள் ஒரு வெடிப்புச் சம்பவம் நடந்தது. துப்பாக்கிச் சூடும். 8 பேர் கொல்லப்பட்டதாக அறிந்தோம். அந்தப் போராட்டச் சூழலை ஒடுக்கக் கூட நடந்திருக்கலாம்” என்று அவர் கூறும்போதே பின்னணியில் சிறையில் இருந்த பெண்கள் பாரசீக மொழியில் பெல்லா ஸாவ் பாடுவது ஒலித்தது. இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கலாம்.