நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசிய நிலையில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
தற்போது நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மன்சூர் அலி கானின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன்” என்றும் கூறியிருந்தார்.
மேலும் மன்சூர் அலி கான் பேச்சுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
இந்த விவகாரத்தில் நாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிடுகிறோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலி கான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான காவல்துறையின் செய்தி குறிப்பு: “நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா கிருஷ்ணன் என்பவர் குறித்து கண்ணியத்தை குறைக்கும் வகையில் மிகவும் அநாகரிகமான முறையில் அவமானப்படுத்தி, பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் (X-Twitter) பரவியது.
இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று (21.11.2023) நடிகர் மன்சூர் அலிகான் மீது 354 (A), 509 ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைக்கு நாளை (நவ.23) மன்சூர் அலி கான் நேரில் ஆஜராக கோரி அவருக்கு ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.