ஈழத்தமிழர்களின் நெடுங்கால மரபுகளின் வழி இம்முறையும், இனிவரும் காலங்களிலும் எமது உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தி வழிபடுவதன் மூலம் எங்களைத் நாங்களே ஆற்றுப்படுத்திக் கொள்கின்ற நினைவேந்தல் நிகழ்வுகளை இராணுவத் தலையீடுகளோ, பொலிஸாரின் அச்சுறுத்தல்களோ அற்று அமைதியான வழியில் கடைப்பிடிப்பதற்கு வழிவகை செய்வதன்மூலம் இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்வாருங்கள் என்று சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் அழைப்பு விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
இனி ஒருபோதும் யுத்தத்தை விரும்பாத எமது மக்கள், பயங்கரவாதம் எனப்படுகின்ற இயல்புகளுக்கு ஒத்திசையாத வகையில் தங்களின் பிள்ளைகளை, அவர்கள் புதைக்கப்பட்ட நிலங்களில் சென்று வழிபடுவதற்கும், விளக்கேற்றுவதற்கும், கண்ணீர்விட்டு அழுவதற்குமான சந்தர்ப்பங்களைத் தடுக்கும் வகையில் அச்சுறுத்தல்களும், விசாரணைகளும் பரவலாக அரங்கேற்றப்படுகின்றன.
போர் முடிவுற்று பதின்மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள 27 மாவீரர் துயிலும் இல்லங்களில்,யாழ்ப்பாண மாவட்டத்தின் கொடிகாமம், எள்ளங்குளம், கோப்பாய் ஆகிய துயிலும் இல்லங்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் துயிலும் இல்லம், முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, ஆலங்குளம், அளம்பில், நெடுங்கேணி களிக்காடுஈ மற்றும் மணலாறிலுள்ள உதயபீடம், கோடாலிக்கல் புனிதபூமி ஆகிய துயிலும் இல்லங்கள், வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லம்,மட்டக்களப்பு தாண்டியடி துயிலும் இல்லம் ஆகிய பன்னிரண்டு மாவீரர் துயிலும் இல்லங்கள் இன்றுவரை இராணுவப் படை முகாம்களாக முற்றுகையிடப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு சூழலில், தமது பிள்ளைகளின் கல்லறைகள் அத்தனையும் போரியல் மாண்புக்குப் புறம்பான வகையில் இடித்தும், பெயர்த்தும் அழிக்கப்பட்ட பின்னரும், அந்தக் கல்லறைகள் நிறைந்திருந்த துயிலும் இல்லங்களைத் தமது புனிதபூமியாக எண்ணியே தமிழர்கள் இன்றளவும் பூசிக்கிறார்கள். திரும்பும் திசையெல்லாம் ஆக்கிரமிப்பின் கால்கள் ஆழ வேரூன்றிப் போயிருக்கும் தமிழர் தாயகத்தில், இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் மீதான ஆக்கிரமிப்பும், வழிபாட்டுரிமை மீதான தடையும் மீளவும் வலிந்து ஏற்படுத்தப்படக் கூடும் என்ற அடிப்படையிம் மக்களிடையே ஆழப்பதிந்திருக்கும் அரசு மீதான நம்பிக்கையீனமும் துயிலும் இல்லத்தின் புனிதத்துவத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதில் அவர்களுக்கிருக்கும் ஆத்ம எதிர்பார்ப்பும் அத்துயிலும் இல்ல வளாகங்களை எல்லைப்படுத்துவதிலும் அலங்கரிப்பதிலும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அத்தகைய மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய காலத்தின் தேவை கருதியும் துயிலும் இல்ல மரபுகளுக்கமையவும் கனகபுரம், முழங்காவில், வன்னிவிளாங்குளம் ஆகிய மூன்று துயிலும் இல்லங்களினதும் நுழைவாயில் முகப்புகளை, அரை நிரந்தரமானவையாக நிறுவியிருக்கிறோம். எமக்கெதிராக அரசு பூசமுற்படுகின்ற பயங்கரவாத முலாம் குறித்த எந்தக் குறியீடுகளும் அவற்றில் காட்சிப்படுத்தப்படவில்லை. ஆனால் போரை நினைவுபடுத்துகின்றஇ நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கின்ற எந்தவொரு அடையாளங்களும் இல்லாத வெற்று முகப்புகளை நிறுவியமைக்காக, இதுவரை நான் உட்பட 13 பேர் பொலிசாரால் தனித்தனியே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளோம்.தமிழர்களின் பூர்வீக மண்ணை ஆக்கிரமித்த நூறு வீதம் தமிழ் மக்களின் புழக்கம் செறிவாக உள்ள தமிழர் தாயகப் பகுதிகளின் பெருநகரங்களிலும் பிரதான வீதிகளிலும் ஏராளமான போர் வெற்றிச் சின்னங்கள் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ளன.
அடிப்படை உரித்துக்கோரிப் போராடிய ஒரு இனத்தைத் தோற்கடித்துவிட்டோம் என்கிற மமதையையும், போரின் குரூரத்தையும், படையினரது ஆக்கிரமிப்புச் சிந்தையையும் முகத்திலறைந்தாற்போல் பிரதிபலிக்கும் ஆயுத கலாசார நினைவுச்சின்னங்கள் சீர்குலைக்காத இன நல்லிணக்கத்தை அவை நினைவுபடுத்தாத போரியல் உணர்வுகளை நினைவேந்தல் உரித்தை நிலைநாட்டுவதற்காக அமைத்த துயிலும் இல்ல முகப்புகள் சீர்குலைக்கும் என்று சிந்திப்பதுகூட ஆக்கிரமிப்பின் அதியுச்ச வெளிப்பாடாகவே தென்படுகிறது.
எனவே எங்களைத் நாங்களே ஆற்றுப்படுத்திக் கொள்கின்ற நினைவேந்தல் நிகழ்வுகளை இராணுவத் தலையீடுகளோ, பொலிஸாரின் அச்சுறுத்தல்களோ அற்று அமைதியான வழியில் கடைப்பிடிப்பதற்கு வழிவகை செய்வதன்மூலம் இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிங்கள இளைஞர் , யுவதிகள் முன் வரவேண்டும் என்றார்.