ஜெய்சங்கர், சி.எல்.ஆனந்தன் ஆகியோரை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் ஜோசப் தளியத் ஜூனியர். சென்னையில், பிரம்மாண்டமான சிட்டாடல் ஸ்டூடியோவை உருவாக்கியவர். ஸ்காட்லாந்தை சேர்ந்த ஏ.ஜே.குரோனின் எழுதிய ‘தி சிட்டாடல்’ என்ற நாவல் தந்த பாதிப்பில் அந்தப் பெயரையே தனது ஸ்டூடியோவுக்கு வைத்தவர்.
இவர், ‘த த்ரீ மஸ்கிடியர்ஸ்’ என்ற பிரபலமான பிரெஞ்ச் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய படம், ‘விஜயபுரி வீரன்’. முற்றிலும் புதியவர்களைக் கொண்டு வெற்றிப்படம் கொடுக்க முடியும் என்று இந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார். இதன் திரைக்கதை எழுதி உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ஏ.சி.திருலோகச் சந்தர். இந்தப் படத்தின் வெற்றிதான் அவருக்கு ஏவிஎம் நிறுவனத்தின் கதவைத் திறந்துவிட்டது. அவர்கள் தயாரித்த ‘வீரத்திருமகன்’ படம் மூலம் இயக்குநர் ஆனார்.
வசனத்தை நாஞ்சில்நாடு டி.என்.ராஜப்பா எழுதினார். ஸ்டன்ட் நடிகராகவும் குழு நடனக் கலைஞராகவும் இருந்த சி.எல்.ஆனந்தன், இந்தப் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். எம்ஜிஆரும் ரஞ்சனும் வாள் சண்டைகளில் புகழ்பெற்றிருந்த போது இந்தப் படம் மூலம் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஆனந்தன்.
டி.கே.எஸ்.நாடகக் குழுவில் நடித்து வந்த ஹேமலதா நாயகியாக நடித்தார். சந்திரகாந்தா, எஸ்.வி.ராமதாஸ், பாண்டி செல்வராஜ், அசோகன் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தில் வில்லியாக காமினி நடித்தார்.
டி.ஆர்.பாப்பா இசை அமைத்தார். தஞ்சை ராமையா தாஸ், கே.டி.சந்தானம், எம்.கே.ஆத்மநாதன் பாடல்களை எழுதினர். ஏ.எம்.ராஜா பாடிய ‘உள்ளத்திலே உரம் வேணுமடா’, ஏ.எம்.ராஜா, ஜிக்கி பாடிய ‘இசை பாடும் தென்றலோடு’, பி.சுசீலா குரலில் ‘ஆளைப் பாரு கண்ணாலே’, ‘ஆசை மச்சான் விசுவாச மச்சான்’, ‘சொல்ல வேணுமா இன்னும் சொல்ல வேணுமா?’, ‘கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடியே’, ‘இன்பம் கொஞ்சும் வெண்ணிலா’ என அனைத்துப் பாடல்களும் அதற்கான நடனங்களும் அப்போது வரவேற்பைப் பெற்றன. இப்போது கேட்டாலும் இந்தப் பாடல்கள் புது ரசனையைத் தருகின்றன.
சந்தர்ப்பவசத்தால் நண்பர்களாகும் மூன்று வீரர்கள், விஜயபுரியின் தளபதியை மயக்கி நாட்டைக் கைப்பற்ற நினைக்கும் பெண்ணையும் அவர் கூட்டத்தையும் எப்படி முறியடிக்கிறார்கள் என்பது கதை. மூன்று வீரர்களாக சி.எல்.ஆனந்தன், பாண்டி செல்வராஜ் , எஸ்.வி. ராமதாஸ் நடித்தனர். படத்தில் ஆனந்தனின் மிரட்டலான வாள் சண்டையும் வி.என்.ஜோதி, ராஜேஸ்வரி, சகுந்தலா, மாதுரி தேவி ஆகியோரின் அசத்தலான நடனமும் அப்போது வெகுவாக பேசப்பட்டன.
1960-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, ஆனந்தனுக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன.
சி.எல்.ஆனந்தன் ஹீரோவாக அறிமுகமான ‘விஜயபுரி வீரன்’
