தமிழ் சினிமாவில் காதல் ‘வைரஸ்’

“மச்சா அந்த பொண்ணோட ஃபுல் டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்றோம். நாளைல இருந்து ஃபாலோ பண்றோம்” என்பது தான் தமிழ் சினிமா ஹீரோக்களின் உயர்ந்த லட்சியமும் குறிக்கோளும். மற்ற எல்லா வேலைகளைவிடமும் முக்கியமான வேலையாகவும், வாழ்வின் நோக்கமாகவும் கொண்டு விடாமுயற்சியாக பெண்ணை துரத்தி, காதலித்து, அவர் மறுப்பை ‘அடிடா அவள, வெட்றா அவள, ஒதடா அவள தேவையே இல்ல’ என வன்முறையாக்கி, இறுதியில் அவரை அடைந்தே தீருவதே கோலிவுட் சொல்லிக் கொடுத்த ‘புனித’ காதல் கதைகள். ‘ஸ்டாக்கிங்’கை தங்களது கடின உழைப்பின் மூலம் ‘நார்மலைஸ்’ செய்த தமிழ் சினிமா இயக்குநர்கள் இப்போது வெகுவாக மாறிவிட்டனர்.

‘மௌன ராகம்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘மின்னலே’, ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘3’, ‘காதலன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘மயக்கம் என்ன’, ‘ரெமோ’, ‘சிவாஜி’, ‘குட்டி’ என அடிஷ்னல் சீட் வரை ‘ஸ்டாக்கி’ படங்களின் பட்டியல் நீளும். செல்வராகவனின் படங்கள் இதனை தெரிந்தோ, தெரியாமலோ ஊக்குவித்தே வந்துள்ளன. ‘7ஜி ரெயின்போ காலனி’ காதல் என்ற போர்வைக்குள் ஒளித்துவைக்கப்பட்ட ஸ்டாக்கிங் கதைக்களம் கொண்ட திரைப்படம்.

‘காதல் கொண்டேன்’ படத்தையும் இ்ந்த லிஸ்டில் தாராளமாக சேர்த்துக்கொள்ள முடியும். போலவே ‘மயக்கம் என்ன’ சொல்லவே தேவையில்லை. ‘வெட்ட’ச் சொனன ஒருவனை காதலனாக ஏற்று திருத்தும் கதை. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ போன்ற வெற்றிமாறன் படங்களிலும், இந்த பிரச்சினைகள் இருப்பதை உணரமுடியும். ‘ஸ்டாக்கிங்குக்கு’ தமிழில் ‘வாங்க பழகலாம்’ என புது வார்த்தையை கண்டுபிடித்து ‘சிவாஜி’ படத்தில் பயன்படுத்தினார் ரஜினி.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தின் அதீத டார்ச்சர் விமர்சகர்களால் கண்டிக்கப்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் என தெரிந்தும் விடாப்பிடியாய் இருக்கும் நாயகன், ‘பிடிக்கவில்லை’ என்று சொன்ன நாயகியின் உணர்வுகளை மதிக்காமல், மாறுவேடமிட்டு, துரத்திச் சென்று லவ் டார்ச்சர் செய்தது, தான் நினைத்ததை சாதிக்க துடிப்பது சைக்கோத்தனம். படத்தின் சில ஜிகினா சீன்களை கலைத்துவிட்டுப் பார்த்தால், கீர்த்தி சுரேஷின் திருமணத்தை நிறுத்தி தொல்லை கொடுத்த உண்மையான வில்லனே நாயகன் தான். ‘மின்னலே’ படமும் கூட கிட்டத்தட்ட இதற்கு நெருக்கமான கதைதான்.

இப்படியான காதலை க்ளோரிஃபை செய்ததன் விளைவு தான் அண்மையில் ட்ரெண்டான ‘கில்லி’ படத்தின் முத்துப்பாண்டியின் காதல் சிலாகிப்பு. உண்மையில் தமிழ் சினிமாவில் பெரும்பாலான காதல் படங்கள் முத்துப்பாண்டி வகையறா நாயகர்கள் பார்வையிலிருந்து விரிந்தது தான். தனலட்சுமியின் (த்ரிஷா) சகோதரர்களைக்கொன்று, விருப்பமில்லை என சொல்லும் பெண்ணை செய்து அடைய நினைப்பதுதான் காதலா?

ஆனால், இப்போதைக்கு இந்த ஸ்டாக்கிங்கில் இருந்து விடுபட்ட தமிழ் சினிமா ‘டாக்சிக்’ அணுகுமுறையை கையில் எடுத்துள்ளதோ என சந்தேகம் எழுகிறது. சமீபத்தில் ஹிட்டடித்த பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ மிகச் சிறந்த உதாரணம். பெண்ணின் முழு சுதந்திரமும் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என நினைக்கும் காதலன், காதலியின் மொபைல் போன் உள்ளிட்ட அனைத்தையும் உளவு பார்ப்பது, பின்தொடர்வது, டார்ச்சர் செய்வது, ‘மாமாகுட்டி’ என கேலி வார்த்தைகளால் அசிங்கப்படுத்துவது அதனை பொதுச்சமூகம் கைதட்டி கொண்டாடியது ஆபத்தானது.

படத்தில் நாயகனும் தவறிழைத்திருப்பார். ஆனால், அது பெரிதாக கண்டுகொள்ளப்படாமல் கடக்கப்பட்டிருக்கும். ஆனால், முழுக்க முழுக்க பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட பெண்ணை குற்றப்படுத்துவதன் மூலம் பொதுசமூகத்தின் வரவேற்பை அறுவடை செய்த அச்சுறுத்தலான ‘டாக்சிக்’ வெற்றியே பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’.

அண்மையில் வெளியாகியிருக்கும் மணிகண்டனின் ‘லவ்வர்’ படம் இப்படியெல்லாம் ‘டாக்சிக்’கான ஆண்கள் இருக்கிறார்கள் என்பதை யதார்த்துக்கு நெருக்கமான படம்பிடிப்பு காட்டியிருக்கிறோம் என சொன்னாலும், அதன் முடிவு நச்சுத்தன்மை கொண்ட கதாபாத்திரத்தை ஹீரோவாக்கியிருப்பதும், பெண்ணை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதுதான் பிரச்சினை. பார்வையாளர்களுக்கே கோபம் வரும் அளவுக்கு நாயகியை டார்ச்சர் செய்யும் நாயகன் எந்த இடத்திலும் தனது தவறை உணர்ந்திருக்கவோ, காதலியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்கவோ மாட்டார்.

இறுதியிலும் கூட அப்பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விலகாமல், தனது ‘ஈகோ’காரணமாக விலகி உணவகம் ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுவதாக படம் முடியும். கடைசிவரை தனது தவறை உணராமல், எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் வாழ்வில் வெற்றிபெறும் ‘டாக்சிக்’ காதலன் ஹீரோவாக போற்றப்படுவதும் அதனை உறுதி செய்யும் வகையில் திரையரங்குகளில் ஒலிக்கும் இளைஞர்களின் கைதட்டலும் தவறான முன்னுதாரணமல்லாமல் வேறென்ன?

இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ஆக ‘ஸ்டாக்கிங்’கில் இருந்து ‘டாக்சிக்’ நோக்கி நகரும் தமிழ் சினிமாவுக்கு கடிவாளமிடுவதோ அல்லது அதனை பாதிக்கப்பட்டவர்கள் பார்வையிலிருந்து கவனமாக கையாள்வதோ மிகவும் அவசியம்.

Related posts