தந்தை செல்வாவின் 47ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் முன்னாள் அரசியல்வாதி, வழக்கறிஞர், நாடாளுமன்ற உறுப்பினராக பொதுச் சேவை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 47வது நினைவு தினம் இன்று (26) நாட்டில் பல்வேறு தரப்பினர் அனுஷ்டித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் 47வது நினைவு தினமும் நினைவுப் பேருரையும் இன்று (26) காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் யாழில் உள்ள தந்தை செல்வநாயகம் நினைவுத் தூபியில் இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் “இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புக்களும் சவால்களும்” எனும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 47ஆவது நினைவு தினம் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப் பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (26) அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது அன்னாரது சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின் நினைவுரைகளும் இடம்பெற்றன.

இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகள், வாலிபர் முன்னணியினர், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா

தந்தை செல்வாவின் 47ஆவது நினைவு தினம் இன்று (26) வவுனியா மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவுப் பேருரையும் ஆற்றப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவு தின நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts