தமிழ்க்கட்சிகளின் பிளவு குறித்து அமெரிக்கத்தூதுவர்

தமிழரசுக்கட்சி வழக்கு விவகாரம் தொடர்பில் கேட்டறிந்திருக்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், தமிழ்க்கட்சிகள் இவ்வாறு பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு புதன்கிழமை (16) மாலை யாழில் உள்ள தனியார் உணவு விடுதியொன்றில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பற்றிப் பேசப்பட்டுவரும் நிலையில், இச்சந்திப்பின்போது அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அதுபற்றிக் கேட்டறிந்தார்.

அதற்குப் பதிலளித்த சிறிதரன், ஜனாதிபதித்தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறித்த இறுதித்தீர்மானம் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்திலேயே மேற்கொள்ளப்படுமென சுட்டிக்காட்டியதுடன், இருப்பினும் நீண்டகாலமாக தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வழங்கப்படாதிருக்கும் நிலையில் இம்முறை தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது சிறந்த மாற்றுத்திட்டமாக அமையும் என்ற நிலைப்பாடு தம்மத்தியில் காணப்படுவதாக எடுத்துரைத்தார்.

‘தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய அரசியல் தீர்வானது உள்ளக சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக அமையவேண்டும். இருப்பினும் தற்போது நடைமுறையில் இருக்கும் ஒற்றையாட்சிக்குள் அது சாத்தியமில்லை.

அண்மையகாலங்களில் சிங்களவர்கள் வாழாத, தமிழர்களுக்குச் சொந்தமான பிரதேசங்களில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.

புதிதாக பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் போதியளவு வாக்குகள் கிடைக்காவிடினும், தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை அடையாளபூர்வமாகவேனும் களமிறக்கவேண்டியது அவசியம்’ எனவும் அவர் மேலும் விளக்கமளித்தார்.

ஆனால் பொதுவேட்பாளர் யோசனையை ஆதரிப்பதாகத் தெரிவித்த சித்தார்த்தன், இருப்பினும் அவ்வாறு களமிறக்கப்படும் வேட்பாளர் போதியளவு வாக்குகளைப் பெறவேண்டியது அவசியம் எனவும், அன்றேல் எம்மால் முன்வைக்கப்படும் தீர்வுசார் கோரிக்கையை மக்களே நிராகரித்துவிட்டதாக அமெரிக்கா உட்பட சகல தரப்பினரும் கூறுவர் எனவும் சுட்டிக்காட்டினார். இருப்பினும் சார்ள்ஸ் நிர்மலாதன் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கத்தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்தே இங்கு கருத்து வெளியிட்டார்.

அதேவேளை போரில் உயிரிழந்தோரை நினைவுகூருவதற்கு அரசாங்கத்தினால் விதிக்கப்படும் தடைகள் மற்றும் இவை பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்பன பற்றியும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அமெரிக்கத்தூதுவரிடம் எடுத்துரைத்தனர்.

மேலும் தமிழரசுக்கட்சி வழக்கு விவகாரம் குறித்து சிறிதரனிடம் வினவிய அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், கட்சிகள் ஒன்றுக்கொன்று பிளவுபட்டு நிற்பது பலவீனமானது எனவும், இதன்விளைவாக மக்களும் பிளவுபடுவர் எனவும் சுட்டிக்காட்டினார். அத்தோடு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால்தான் தமிழர் பிரச்சினைகளுக்குரிய தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts