எமது நாட்டில் அரசாங்கத்தினால் செய்ய வேண்டிய விடயங்களைச் செய்யாமலும் செய்யக்கூடாத விடயங்களை செய்ததாலும் நாடு சீரழிந்துள்ளது. அதனால் நாட்டின் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் வகையில் மேலும் பல புதிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
தேசிய மத்தியஸ்த தினத்தை முன்னிட்டு இலங்கை மன்ற கல்லூரியில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் மாற்றத்தை ஏற்படுத்த விருப்பம் உள்ளவர்கள் ஆட்சியில் இருக்கவேண்டும். நாட்டில் இருக்கும் பிரதான சட்டங்களில் திருத்தம் மேற்கொண்டு புதிய சட்டங்களை கொண்டுவர தேவையான வரைபை நாங்கள் தயாரித்துள்ளோம். அதனால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமானவர்களை ஆட்சியாளர்களாக தெரிவு செய்யும் பொறுப்பு மக்களிடமே இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் விவாகரத்து சட்டம் உள்ளிட்ட பல புதிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம்.
எமது நாட்டில் அரசாங்கத்தினால் மேற்கொள்ள வேண்டிய விடயங்களை செய்யாமலும் செய்யக்கூடாத விடயங்களைச் செய்ததாலும் நாடு சீரழிந்துள்ளது. அதன் பெறுபேறுகளை நாங்கள் கடந்த காலங்களில் கண்டுகொண்டோம். நாட்டில் மத்தியஸ்த சபை முறைமையினால் நீதிமன்றங்களுக்குச் செல்லும் இலட்சக்கணக்கான வழக்குகள் குறைவடைந்துள்ளன. இதனால் எமது நாட்டில் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு, குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன. 2015ஆம் ஆண்டில் மத்தியஸ்த சபைகளுக்கு முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக ஒரு இலட்சத்தி 50ஆயிரம் ரூபாவாக இருந்த நிதி ஒதுக்கீட்டை 2023ஆம் ஆண்டில் அதனை 10இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.
மேலும் மத்தியஸ்த சபைக்குக் கடந்த வருடம் 3இலட்சத்து 11ஆயிரம் முறைப்பாடுகள் மத்தியஸ்தம் செய்துவைப்பதற்காக வந்திருந்தன. அவற்றில் நூற்றுக்கு 70வீதம் தீர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தால், நீதிமன்றங்களில் வருடத்துக்கு மேலும் ஒரு இலட்சம் வழக்கு விசாரணைகள் அதிகரிக்கின்றன.
கடந்த காலங்களில் நாங்கள் சட்ட கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி, பல புதிய சட்ட திட்டங்களை அனுமதித்துக்கொண்டோம். மாற்றம் ஒன்று தேவை எனத் தெரிவித்தவர்களுக்கு ஒரு புள்ளியேனும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும் நாங்கள் அந்த மாற்றத்தை ஏற்படுத்தினோம். சட்ட வரைபை பலப்படுத்தினோம். விவாகரத்து தொடர்பான சட்டத்தை இலகுபடுத்தி புதிய சட்ட திருத்தங்களை மேற்கொண்டோம். அதனைஅடுத்த மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கிறோம். ஏனெனில் ஒருசில விவாகரத்து வழக்குகள் பல வருடங்களாகியும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இதனால் ஒரு தரப்புக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
அதேபோன்று குற்றவியல் சட்டம், போலி ஆவணங்கள் தயாரிப்பு போன்ற குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்க இருக்கிறோம் என்றார்.