கல்லூரியில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு கவர்ச்சியான உடை அணிந்து வந்ததாக அமலா பால் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மலையாளத்தில் அர்ஃபாஸ் அயூப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லெவல் க்ராஸ்’. இதில் ஆசிப் அலி, அமலா பால் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். நாளை (ஜூலை 26) திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வந்தது.
அந்த வகையில் சமீபத்தில் கொச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இப்படத்துக்கான புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமலா பால் கவர்ச்சியான உடையை அணிந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. மாணவர்கள் முன்னிலையில் இதுபோன்ற ஆடையை அணியலாமா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.
இதற்கு அமலா பால் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ”என்னுடைய ஆடையை கேமராக்கள் காட்சியப்படுத்திய விதம்தான் பிரச்சினை. எனக்கு எது வசதியான ஆடையோ அதைத்தான் நான் அணிந்திருந்தேன். அந்த விழாவில் என்னுடைய ஆடை கவர்ச்சியாக இருக்கவில்லை. ஆனால் கேமராக்கள் அதை கவர்ச்சியாக காட்சியப்படுத்தியுள்ளன. அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது.
என்னுடைய ஆடையில் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருந்ததாக தெரியவில்லை. பாரம்பரிய உடைகளோ, மேற்கத்திய உடைகளோ, எல்லா வகையான உடைகளையும் நான் அணிவேன். அந்த ஆடையை அணிந்ததன் மூலம், மாணவர்களின் ஆடை தேர்வு குறித்து நம்பிக்கையை ஏற்படுத்த விரும்பினேன்” இவ்வாறு அமலா பால் தெரிவித்துள்ளார்.