தமிழில் சர்வைவல் பாணி திரைப்படங்கள் மிகவும் குறைவு. இந்திய அளவிலேயே இந்த பாணி பெரும்பாலும் கையில் எடுக்கப்படவில்லை. அப்படி எடுக்கப்பட்ட ஓரிரு முயற்சிகளும் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஒரு படகில் கடலுக்குள் தப்பிச் செல்லும் சில மனிதர்களைப் பற்றிய உணர்வுபூர்வமான கதை என்று விளம்பரப்பத்தப்பட்ட ‘போட்’ படம் அதற்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம்.
சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. மெட்ராஸைப் பூர்விகமாகக் கொண்ட குமரன் (யோகிபாபு) தனது பாட்டியுடன் சேர்ந்து, வெள்ளையரின் பிடியில் இருக்கும் தனது தம்பியை விடுவிக்க முயற்சிக்கிறார். அந்த சமயத்தில் சென்னையின் மீது ஜப்பான் குண்டுமழை பொழிவதால் அதிலிருந்து தப்பிக்க தனது படகில் கடலுக்குள் செல்ல முயல்கிறார்.
அவருடன் ஒரு கர்ப்பிணி (மதுமிதா), அவரது மகன், ஒரு கடவுள் மறுப்பாளர் (எம்.எஸ்.பாஸ்கர்), ஒரு பிராமணர் (சின்னி ஜெயந்த்), அவரது மகள் (கவுரி கிஷன்), ஓர் இஸ்லாமியர் (ஷா ரா), ஒரு வட இந்தியர் (சாம்ஸ்) உள்ளிட்டோரும் படகில் ஏறிக்கொள்கின்றனர். தான் வந்த படகு விபத்தானதால் பாதி தூரத்தில் ஒரு வெள்ளைக்காரரும் ஏறுகிறார்.
இதன் பிறகு வெள்ளைக்காரரால் ஏற்படும் சலசலப்பால் படகு சேதமடைகிறது. படகை கரைக்கு திருப்பவும் முடியாமல், மேற்கொண்டு நகரவும் முடியாத சூழலில் படகில் இருப்போர் சில முடிவுகளை எடுக்கின்றனர். அதேநேரம் படகில் ஒரு தீவிரவாதி மாறுவேடத்தில் இருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது. அந்த தீவிரவாதி யார்? படகில் இருப்பவர்கள் இறுதியாக என்ன ஆனார்கள் என்பதே ‘போட்’ படத்தின் திரைக்கதை.
தனது முந்தைய படங்களாக ‘23-ஆம் புலிகேசி’, ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’ போன்ற படங்களின் மூலம் அதிகாரத்தை, சமூகத்தை போகிற போக்கில் அட்டகாசமாக பகடி செய்த சிம்புதேவன், இந்த படத்தில் ‘12 ஆங்கிரி மேன்’ பாணியிலான ஒரு களத்தை கையில் எடுத்திருக்கிறார். ஆனால், முந்தைய படங்களில் இருந்த எள்ளலும், சுவாரஸ்யமும் ‘போட்’ படத்தில் அறவே மிஸ்ஸிங் என்பது துயரம்.
ஒரு சர்வைவல் டிராமாவுக்கு தேவையான கச்சிதமான கதை இது. கூடவே நகைச்சுவை, சமூகத்தின் மீதான பகடி, எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கிண்டலாக கணிப்பது என பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், அவை எதுவும் படத்துக்கும் கைகொடுக்கவில்லை. மாறாக, அவை வலிந்து திணிக்கப்பட்டதாகவே வருகின்றன.
‘12 ஆங்கிரி மேன்’ 1957-ஆம் ஆண்டு வெளியான படம். ஓர் அறையில் நடக்கும் கதையில் படம் முழுக்க 12 பேர் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் ஒரு நொடி கூட நமக்கு எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாது. ஆனால், அதிலிருந்து உந்துதல் பெற்று எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இப்படம், பார்ப்பவர்களுக்கு அத்தகையை தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறது.
அந்தப் படகு சமூகத்தின் ஒரு மினியேச்சர் வடிவமாக காட்டப்படுகிறது. அதில் இருப்பவர்கள் யாவரும் சமூகத்தில் பல்வேறு அடுக்குகளில் இருக்கும் மாந்தர்கள். மற்றவர்கள் மீதான அவர்களின் பார்வைகள், அவரவர் சமூகப் புரிதல் ஆகியவற்றை சொல்ல நினைத்த முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளும் விஷயங்கள் எதுவும் ஒட்டவில்லை.
குறிப்பாக, படத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஒருவித அமெச்சூர்த்தனம் காட்சிக்கு காட்சி துருத்திக் கொண்டு தெரிவது பெரிய மைனஸ். பலவீனமான காட்சியமைப்புகளால் கதாபாத்திரங்களின் தன்மைகளோ, அவை பேசும் அரசியலோ நமக்கு எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
சிம்புதேவனின் முந்தைய படங்களிலும் எதிர்கால நிகழ்வுகளை பகடியாக பேசும் காட்சிகள் உண்டு. ஆனால் அவை கதையின் போக்கோடு வருவதால் அவை ரசிக்கும்படி இருந்தது. உதாரணமாக 23-ஆம் புலிகேசியில் ‘கப்ஸி’, ‘அக்காமாலா’ உள்ளிட்ட வசனங்களை சொல்லலாம். இதிலும் அது போல ஸ்விக்கி, ஜொமேட்டோ போன்றவற்றை கிண்டலடிக்கும் வசனம் ஓரிடத்தில் வருகிறது. ஆனால், அது சுத்தமாக எடுபடவில்லை.
படத்தின் நடிகர்களான யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ஷா ரா, மதுமிதா, கவுரி கிஷன் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை மிகச் சரியாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக யோகி பாபு வழக்கமாக காமெடி என்கிற எரிச்சலூட்டாமல் மிக அடக்கமான இயல்பான நடிப்பை தருவது ஆறுதல்.
படத்தின் முதல் ஹீரோ ஒளிப்பதிவுதான். கடலின் அழகை பல வண்ணங்களில் மிக அழகாக காட்டியிருக்கிறது மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா. க்ரீன் மேட்டா அல்லது உண்மையான கடலா என்று கணிக்கமுடியாத அளவுக்கு துல்லியமான வேலைப்பாடு. ஜிப்ரானின் பின்னணி இசை அமைதியான இடத்தில் எல்லாம் தேவையே இன்றி ஒலித்து இம்சிக்கிறது. படத்தில் வரும் அந்த கானா + கர்நாடக சங்கீதம் கலந்த பாடலும், க்ளைமாக்ஸில் வரும் பாடலும் மனதில் நிற்கின்றன.
கடல் பின்னணியில் மனித மனங்களைப் பேசும் ஒரு கதையில் எந்த இடத்திலும் ‘கிராஃப்ட்’ என்ற ஒன்றே இல்லாமல் போனது பெரும் குறை. அல்லது இவர்களுக்கு இதுவே போதும் என்று இயக்குநர் நினைத்துவிட்டாரா என்று தெரியவில்லை. அதிலும் ட்விஸ்ட் என்ற பெயரில் ‘இந்தியன்’, ’அந்த நாள்’ படங்களை இணைத்திருப்பது எல்லாம் சுத்தமாக ஒட்டவில்லை.
ஒரு சர்வதேச சினிமா அளவுக்கு பேசப்பட்டிருக்க வேண்டிய ஓர் அற்புதமான களம் வீணடிக்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். மெனக்கெடாத திரைக்கதை, பலவீனமான காட்சியமைப்புகளால் கரைசேராமல் தத்தளித்து தடுமாறுகிறது ‘போட்’