இந்தியில் ஹிட்டான ‘அந்தாதுன்’ படத்தை ‘அந்தகன்’ ஆக்கியிருக்கிறார், நடிகரும் இயக்குநருமான தியாகராஜன். பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. படத்தின் புரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
“இந்தியில, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இந்தப் படத்துக்கு அருமையா திரைக்கதை அமைச்சிருக்கார். ஒவ்வொரு காட்சி முடிஞ்சதும் அடுத்தது என்னங்கற பரபரப்பு, சென்டிமென்ட், சஸ்பென்ஸ்னு படம் வேகமா போகும். ஏற்கெனவே வெற்றி பெற்ற படம் அப்படிங்கறதால தமிழுக்காக பெரிய மாற்றங்கள் பண்ணல, அது தேவையுமில்லை. அதனால சின்ன மாற்றங்களை மட்டும் பண்ணியிருக்கேன். கண்டிப்பா ரசிகர்களுக்கு புது உணர்வை இந்தப் படம் கொடுக்கும்” என்கிறார் தியாகராஜன்.
படத்துல ஹீரோ பார்வையற்ற பியோனா இசைக் கலைஞரா வர்றார். பிரசாந்த் அதுக்கு ஏதும் பயிற்சி எடுத்தாரா?
அவருக்கு பியானோ நல்லா வாசிக்கத் தெரியும். படத்துல பியானோ இசையை கம்போஸ் பண்ணினது, லிடியன் நாதஸ்வரம். ஆனா, அதை நிஜமாகவே வாசிச்சது பிரசாந்த். அதனால அந்த காட்சிகள் நடிப்பா இல்லாம, இயல்பா இருக்கிற மாதிரி தெரியும். அதே போல சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையும் பாராட்டற மாதிரி இருக்கும்.
படத்துல நிறைய நட்சத்திரங்கள் இருக்காங்களே?
இந்தியில இந்தப் படத்தைப் பார்க்கும் போதே, ஆயுஷ்மான் குராணா, தபு தவிர மத்தவங்க அதிகம் தெரியாதவங்கதான். ஆனா, இதுல எல்லா கேரக்டர்கள்லயும் முக்கியமான நடிகர்களை நடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணினேன். பிரசாந்த், பிரியா ஆனந்த் தவிர, நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், ஊர்வசி, யோகிபாபு, பூவையார்னு நிறைய பேர் இந்தக் கதைக்குள்ள வந்ததும் படம் பிரம்மாண்டமா மாறுச்சு. கதைக்கு வலு சேர்க்கறதாகவும் இவங்க நடிப்பு இருக்கும்.