பிரசாந்தின் ‘கம்பேக்’ எப்படி?

1990, 2000 ஆண்டுகளில் திரையில் கோலோச்சிய நடிகரின் ‘ரீ என்ட்ரி’யை மீண்டும் திரையில் பார்ப்பது உற்சாகம் கூட்டக் கூடிய அனுபவம்தான். அதுவும் வெற்றிபெற்ற ஒரு படத்தின் ரீமேக் எனும்போது ஒருவித நம்பிக்கையையும் கூடவே அழைத்துச் செல்வது இயல்பு. அப்படியான எதிர்பார்ப்புகளால் சூழப்பட்டு ஒருவழியாக திரைக்கு வந்துள்ளது பிரசாந்தின் ‘அந்தகன்’. படம் கொடுத்த அனுபவம் எப்படி என்பதைப் பார்ப்போம்.

பார்வையற்றவராக தன்னைக் காட்டிக்கொள்ளும் க்ரிஷ் (பிரசாந்த்) ஆத்மார்த்தமான ஓர் இசை பிரியர். பெரிய பியானோ கலைஞனாக வேண்டும் என ஆசைப்படும் அவர், அதற்காக லண்டன் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில் அவருக்கும் ஜுலிக்கும் (பிரியா ஆனந்த்) இடையே நட்பு மலர்கிறது. அவரது ரெஸ்ட்ரோ பாரில் க்ரிஷுக்கு பியானோ வாசிக்கும் வேலை கிடைக்க, அந்த ஊதியத்தை வைத்து லண்டன் செல்ல திட்டமிடுகிறார். இப்படியாக வாழ்க்கை சீராக சென்றுகொண்டிருக்கும்போது, க்ரிஷுக்கு முன்னால் கொலை ஒன்று நிகழ்ந்து அவரது திட்டம் மொத்தமும் தலைகீழாக மாறிவிடுகிறது. அந்தக் கொலையும் அதன் பின் நடக்கும் சம்பவங்களும் க்ரிஷின் இசைக் ‘கனவை’ கலைத்ததா, உயிர்பெறச் செய்ததா, என்னதான் நடந்தது என்பதே திரைக்கதை.

கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக்கான இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். அந்தப் படத்தின் காட்சிகளை அச்சு அசலாக தமிழுக்கு மாற்றியிருப்பதால், ஒரிஜினல் வெர்ஷனை பார்த்த பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யம் கிட்டுவது கொஞ்சம் கடினம். ஆனால், அசல் படத்தைப் பார்த்து மறந்துபோனவர்களுக்கும், புதிய பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் கொடுக்காத வகையில் தமிழுக்கு ஏற்ற வகையிலான நேர்த்தியாக இயக்கம் கவனிக்க வைக்கிறது. இதற்கு மற்றொரு காரணம், நீர்த்துப்போகாத கதையின் திருப்பங்களும், அதன் எங்கேஜிங் தன்மையும்.

குறிப்பாக பியானோ வாசிக்கும் பிரசாந்த் பல இடங்களில் இளையராஜாவின் இசையில் ரெட்ரோ பாடல்களின் இசையை மீட்டெடுப்பது, ஒரிஜினல் நடிகராக கார்த்தி, தனது ‘மவுன ராகம்’ படத்தைப் பார்ப்பது, ‘ஜீன்ஸ்’ பட ரெஃபரன்ஸ் ஆகியவை நினைவுகளை மீட்பதுடன் ரசிக்கவும் வைக்கிறது. ‘சந்திரனே சூரியனே’ மற்றும் ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா’ பாடல்கள் வரும் இடம் அட்டகாசம். ஒப்பீட்டளவில் ‘அந்தாதூன்’ படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா – ராதிகா ஆப்தே இடையே ஒருவித இயல்புத்தன்மையுடன் கூடிய நட்பும், காதலும் இருக்கும். பிரசாந்த் – ப்ரியா ஆனந்திடம் அது கொஞ்சம் மிஸ்ஸிங். அதேசமயம் சில கதாபாத்திரங்கள் ஒரிஜினலை விட மிஞ்சி நிற்கின்றன. உதாரணம் ஊர்வசி கதாபாத்திரம்.

ஒருபுறம் அப்பாவியான இசைக் கலைஞனாகவும், மறுபுறம் பதற்றம், பயத்துடன் போராட்டம் நடத்துபவராகவும் தன்னால் முடிந்த அளவுக்கு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துகிறார் பிரசாந்த். அழுத்தமான எதிர்மறை கதாபாத்திரத்தில் சிம்ரன் ரசிக்க வைக்கிறார். எல்லோரையும் ‘ஓவர்டேக்’ செய்து நடிப்பால் திரையில் ஆளுமை செலுத்துகிறார். பிரியா ஆனந்த் குறைந்த திரைநேரம் எடுத்துக் கொண்டாலும் நிறைந்த நடிப்பை வழங்கத் தவறவில்லை. ஊர்வசி – யோகிபாபு காம்போ புன்முறுவலுக்கு உத்தரவாதம் கொடுக்கிறது. கார்த்திக் வழக்கமான உடல்மொழியில் தடம் பதிக்கிறார். சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா உள்ளிட்டோர் தேவையான பங்களிப்பு செலுத்துகின்றனர்.

இசையின் வழியே நகரும் கதையில் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை திருப்பம் நிறைந்த காட்சிகளில் அதிர்ச்சியை கூட்டுகிறது. பியானோ இசை ஈர்க்கிறது. பாடல்கள் பெரிதாக ஒட்டவில்லை. இறுதியில் வரும் ‘என் காதல்’ பாடல் ஓகே. திரைக்கதையின் அடர்த்தியைக் கூட்டும் ரவி யாதவ் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பும் படத்துக்கு பலம்.

திருப்பம் நிறைந்த விறுவிறுப்பான கதை என்பதால் பெரிதாக போராடிக்காமல் நகர்கிறது படம். அதற்கு முதிர்ச்சியான நடிகர்களின் பங்களிப்பும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. அதேசமயம் ‘அந்தாதூன்’ படம் பார்த்து ஒவ்வொரு காட்சியையும் மறவாதவர்களுக்கு நிறைவு தருவது சந்தேகமே.

Related posts