ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக ஒன்றுகூடியது பொதுஜன ஐக்கிய முன்னணி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் புதிய கூட்டணி இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டு, இக்கூட்டணியின் செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த கூட்டணியின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு இன்று (14) காலை பத்தரமுல்ல, வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்றது.

இதன்போது கூட்டணியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண செயற்குழுவின் 21 உறுப்பினர்களது பெயர்களை அறிவித்தார்.

அதனையடுத்து, கூட்டணியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் கூட்டணியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தனர்.

அதனை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் உரையாற்றினர்.

இதன்போது நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றுகையில்,

இனி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்காத ஒரு ஜனநாயக கூட்டணியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அதனால் எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியாக இருந்தாலும் சரி, ஐக்கிய மக்கள் சக்தியாக இருந்தாலும் சரி, ஜே.வி.பியாக இருந்தாலும் சரி… யார் வேண்டுமானாலும் எமது கூட்டணியில் இணையலாம். அதற்காக கூட்டணியின் கதவு எந்நேரமும் திறந்தே இருக்கிறது என்றார்.

இந்த நிகழ்வில் கூட்டணியின் தலைவரான அநுர பிரியதர்ஷன யாப்பா உரையாற்றுகையில், தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயற்குழு கூடி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தலில் ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவரது வெற்றிக்காக கூட்டணி பாடுபடும் என்று தெரிவித்தார்.

Related posts