நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தல் எதிர்பாராத ஒரு மாற்றத்தை கொண்டு வர இருக்கின்றது குறிப்பாக எந்த ஒரு வேட்பாளரும் 50 வீதத்துக்கு மேல் வாக்குகளை பெறக்கூடிய சாத்தியம் இல்லாமல் உள்ளது என ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுக் கட்டமைப்பின் பொது வேட்பாளர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தனது வாக்கைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடகிழக்கை சேர்ந்த தமிழ் மக்கள் தனித்துவமானவர்கள் தனித்துவமான ஒரு சுய நிர்ணய உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கான எந்த ஒரு தீர்வும் கடந்த எட்டு ஜனாதிபதிகளும் தரவில்லை. அதற்காக தமிழ் பொது கட்டமைப்பு என்ற அமைப்பு 83 சிவில் அமைப்புகளும் ஏழு தமிழ் அரசியல் கட்சிகளும் இணைந்து என்னை ஒரு பொது வேட்பாளராக சங்கு சின்னத்தில் போட்டியிட வைத்துள்ளார்கள்.
இந்த தேர்தல் முடிவானது வடகிழக்கு மக்கள் இணைந்த வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். என்கின்ற ஒரு செய்தியை இலங்கையில் ஆட்சி பீடம் ஏற இருக்கின்ற ஒன்பதாவது ஜனாதிபதிக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அண்மை நாடாக இருக்கும் இந்தியாவிற்கும் ஒரு செய்தியை கொடுக்கக்கூடிய நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
நான் வடகிழக்கில் இருக்கின்ற எட்டு மாவட்டத்திற்கும் நேரில் சென்று தேரதல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தேன். வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் மாத்திரமன்றி வடகிழக்குக்கு அப்பால் இருக்கின்ற தமிழ் மக்களும் எனக்கு வாக்களிப்பதற்காக அவர்களின் செய்திகளை தொடர்ச்சியாக தெரிவித்த வண்ணம் இருந்தார்கள்.
எனவே எனது சின்னத்துக்கு வாக்களிக்கின்ற அனைத்து உறவுகளுக்கும் நான் நன்றி அறிதலை தெரிவிப்பதற்கு கடமை பட்டு உள்ளேன். இந்த தேர்தல் முடிவுக்கு பின் அடுத்து வரும் மாற்றத்தின் அடிப்படையில் அந்த தேர்தல் முடிவு வெளிவர இருக்கின்றது.
இன்னிலையில் சில தீய சக்திகள் சில துண்டு பிரசுரங்களையும் அச்சிட்டு வெளியிட்டு இருக்கின்றார்கள் குறிப்பாக நான் அங்கம் வகிக்கின்ற இலங்கை தமிழரசு கட்சியிலே சேர்ந்த ஒரு சிலர் இந்த அடாவடித்தனமாக நான் இந்த தேர்தலில் இருந்து விலகி சஜித் பிரமதாசவை ஆதரிப்பதாக ஒரு துண்டு பிரசுரமும், இன்னும் ஒரு துண்டு பிரசுரம் சஜித் பிரேமதாச அவர்களுக்கு முதலாம் இலக்கத்தையும் இரண்டாம் இலக்கத்தை எனது சங்கு சின்னத்துக்கு போடுமாறு அந்த துண்டு பிரசுரத்தில் அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றார்கள்.
என்னை ஆதரிப்பவர்கள் சங்கு சிந்தனைத்துக்கும் மாத்திரமே வாக்களிக்க வேண்டும். நான் வேறு எந்த சிங்கள பேரினவாதிகளையும் என்னுடன் சேர்த்து அந்த பிரசாரம் செய்வதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
துண்டு பிரசுரம் அச்சிட்டு வெளியிட்டவர்களுக்கு வாக்குப் பலமோ ஆதரவோ இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனாலும் ஆதரவு பெருகி இருக்கின்ற தமிழ் பொது வேட்பாளராகிய என்னை மிகவும் கேவலப்படுத்துகின்ற விதத்திலும் எனது செல்வாக்கை குறைக்கின்ற விதத்திலும் இவ்வாறான விளம்பரங்கள் இவ்வாறான துண்டு பிரசுரங்கள் தொடர்ச்சியாக வருவதை எந்த ஒரு மக்களும் நம்ப வேண்டாம். இந்த துண்டு பிரசுரம் போடுபவர்கள் அனாமதேய பிரசாரங்களை மேற்கொண்டுபவர்களுக்கு தக்க பாடங்களை வருகின்ற தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
எனவே வாக்களித்துவிட்டு தமிழ் உறவுகள் அனைவரும் வீடுகளிலேயே இருந்து முடிவை பார்க்குமாறும் நான் தயவாக கேட்டுக் கொள்கின்றேன். மேலும் எந்தவித தீய நடவடிக்கைகளிலும் பிரசாரங்களிலும் சச்சரவுகள் இல்லாமல் அமைதியாகச் சென்று தேர்தல் முடிவுகளை அவதானிக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் இஇதன்போது தெரிவித்தார்.