பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு, ஊழல் ஒழிப்பு,

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணல், ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தல் மற்றும் ஆட்சி நிர்வாகம், மனித உரிமைகள், கடந்தகால மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் என்பவற்றில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் ஆகியவற்றில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அவரது நிர்வாகமும் உடனடிக் கவனம் செலுத்தவேண்டியிருப்பதாக அமெரிக்க செனெட் சபையின் வெளியுறவு குழு தலைவர் பென் கார்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (21) நடைபெற்று முடிந்த இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் அமெரிக்க செனெட் சபையின் வெளியுறவுக்குழு தலைவர் பென் கார்டின், அதில் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பல மில்லியன் மக்கள் அமைதியான முறையில் தமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். இது அவர்களது நாட்டின் வருங்காலப் பாதையை வடிவமைப்பதில் அவர்கள் கொண்டிருக்கும் ஆழமானதும், அர்த்தமுள்ளதுமான அர்ப்பணிப்பைக் காண்பிக்கின்றது.

தற்போது தேர்தலின் மூலம் தெரிவாகி ஜனாதிபதியாகக் கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவும், அவரது நிர்வாகமும் முகங்கொடுக்கவேண்டிய சில உடனடி சவால்கள் உள்ளன. குறிப்பாக கடந்த 2022ஆம் ஆண்டு மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணல், ஆட்சி நிர்வாகம், ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தல், மனித உரிமைகள், கடந்தகால மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் என்பனவே அவையாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார ரீதியில் ஸ்திரமான எதிர்காலத்தையும், அனைவரையும் உள்ளடக்கியதுமான ஜனநாயகத்தையும் அடைந்துகொள்வதற்கான இலங்கை மக்களின் முயற்சிகளுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts