தேவரா ஒரு ‘பான் இந்தியா’ மசாலா!

ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ தந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் சோலோவாக களமிறங்கியுள்ள படம் ‘தேவரா: பார்ட் 1’. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுக்குப் பிறகு தனித்து ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய அழுத்தத்துடன் ‘ஆச்சார்யா’ இயக்குநர் கொரட்டலா சிவா உடன் கைகோத்துள்ள படம் இது.

பயமென்றால் என்னவென்றே தெரியாத நான்கு கடலோர கிராமங்கள். அந்த கிராமங்களுக்கு தலா ஒரு தலைவர். அதில் ஒரு தலைவராக இருப்பவர் தேவரா (ஜூனியர் என்டிஆர்). அனைவராலும் மதிக்கப்படக்கூடிய தேவரா சொல்வதை மற்ற கிராமத்தினரும் கேட்கின்றனர். அரசியல்வாதி ஒருவர் சொல்லும் ஒரு கடத்தல் வேலையை என்ன ஏது என்று கேட்காமல் செய்யும் அவர்களுக்கு ஒருகட்டத்தில் தாங்கள் செய்வது ஆயுதக் கடத்தல் என்பது தெரிய வருகிறது. இதற்கு தேவரா எதிர்ப்பு தெரிவிக்கிறார். மற்றவர்களையும் இனி அந்த வேலையை செய்யக் கூடாது என தடுக்கிறார்.

தேவராவின் நெருங்கிய நண்பரும், இன்னொரு கிராமத்தின் தலைவருமான பைராவுக்கு (சைஃப் அலிகான்) இது பிடிக்கவில்லை. இதனால் மற்ற ஊர் தலைவர்களுடன் சேர்ந்து தேவராவை தீர்த்துக் கட்ட முயற்சிக்கிறார். இதனை அறிந்துகொள்ளும் தேவரா அங்கிருந்து தப்பித்துச் சென்று விடுகிறார். பல ஆண்டுகள் கழித்து தேவராவின் மகன் வரா (ஜூனியர் என்டிஆர்) தந்தையை போல் இல்லாமல் கோழையாக வளர்கிறார். அவருக்கு வீரம் வந்ததும் (?) காதலிக்க காத்திருக்கிறார். கடைசியில் ஹீரோவுக்கு வீரம் வந்ததா இல்லையா என்பதே ‘தேவரா’ படத்தின் திரைக்கதை.

கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு பான் இந்தியா என்ற அடைமொழியுடம் வெளியாகும் படங்களில் இருக்கும் டார்க் லைட்டிங், தொடக்கம் முதல் இறுதி வரை ஹீரோவின் பிளாஷ்பேக்கை அதீத பில்டப் உடன் சொல்லும் ஒரு பெரியவர், ஊறுகாய் போன்ற ஒரு ஹீரோயின், ஒவ்வொரு மொழியில் இருந்து பேருக்கு ஒரு நடிகர் என அனைத்து அம்சங்களும் அச்சு பிசகாமல் இதிலும் இருக்கின்றன. ஆனால், பான் இந்தியா படங்களுக்கு தேவையான ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை மட்டும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பது சோகம்.

தெலுங்கு சினிமாவுக்கே உரிய லாஜிக்கே இல்லாத ஒரு கதையுடன் நல்ல தொழில்நுட்ப குழுவுடன் களமிறங்கிய இயக்குநர் சிவா, சுறா மீனையே சுள்ளெறும்பு போல தூக்கி சுத்துவது, ஒரு கன்டெய்னரையே சூட்கேஸ் போல மலை மீதிருந்து தள்ளிவிடுவது போன்ற மிகை ஹீரோயிசத்தை மட்டுமே நம்பி திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். ‘கேஜிஎஃப்’, ‘பாகுபலி’ போன்ற படங்களிலும் இவை உண்டு என்றாலும் படம் முழுக்க ஹீரோயிசத்தை நியாயம் செய்யும் சிலிர்ப்பு அனுபவத்தை அவை தரத் தவறவில்லை. இது தேவராவின் மிஸ்ஸிங்.

படத்தில் ஹீரோவின் அறிமுகக் காட்சி குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ஆர்ப்பரிக்கும் கடலில் டால்பின் போல சீறியபடி வெளியே வருகிறார் ஜூனியர் என்டிஆர். எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறதா? ஆம், பல வருடங்களுக்கு முன்பு ‘சுறா’ படத்தில் வந்த விஜய்யின் இதே இன்ட்ரோ காட்சியை இன்று வரை ட்ரோல் செய்கிறது தமிழ் சமூகம். அறிமுகக் காட்சி மட்டுமல்ல, முதல் பாதியில் ஹீரோவின் கதாபாத்திர வடிவமைப்பு கூட பல இடங்களில் ‘சுறா’வை நினைவூட்டுகிறது.

ஹீரோவாக டபுள் ரோலில் ஜூனியர் என்டிஆர். கேரகடரிலும் சரி, கெட்அப்பிலும் சரி எந்தவித வித்தியாசத்தையும் காட்டவில்லை. ஹேர்ஸ்டைலில் மட்டும் சின்ன மாற்றம். எமோஷனல், ஆக்‌ஷன் காட்சிகளில் ஈர்க்கிறார். வில்லனாக சைஃப் அலி கான். ஆரம்பம் முதலே அவரை விட ஹீரோவே வலிமையானவர் என்று காட்டியதால் அவரது கதாபாத்திரம் பெரிதாக ஈர்க்கவில்லை. ஜான்வி கபூர் இதுவரை வந்த தெலுங்கு மசாலா படங்களில் ஹீரோயினுக்கு என்ன வேலையோ அதை செவ்வனே செய்திருக்கிறார்.

கேஜிஎஃப் பட பாணியில் ஃப்ளாஷ்பேக் சொல்லும் தாத்தா கேரக்டரில் பிரகாஷ்ராஜ் வருகிறார். அதை தாண்டி அவருக்கு படத்தில் வேலையில்லை. வழக்கம்போல கலையரசன், சைன் டாம் சாக்கோ போன்ற நல்ல நடிகர்களை எல்லாம் தூக்கி வந்து அவர்களுக்கு துக்கடா கதாபாத்திரங்களை கொடுத்து வீணடித்துள்ளனர்.
படத்தின் பெரிய பலம் ரத்னவேலுவின் ஒளிப்பதிவும் அனிருத்தின் இசையும். இவர்கள் இருவருமே படத்தை பெரும்பாலும் தூக்கி நிறுத்துகின்றனர். என்னதான் சமூக வலைதளங்களில் அனிருத்தின் வேலைப்பாடுகள் விமர்சிக்கப்பட்டாலும், தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்களை தூக்கி நிறுத்துவதே அவர்தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் மகன் ஜூனியர் என்டிஆர் கதாப்பாத்திரம் அப்படியே சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தை ஞாபகப் படுத்துகிறது. வீரனான அப்பா, கோழை மகன் என அதே டெய்லர், அதே வாடகை.
மொத்தத்தில் பான் இந்தியா படம் என்ற பெயரில் வெறும் ஹீரோயிசத்தையும், தொழில்நுட்ப அம்சங்களையும் மட்டுமே நம்பி வெளியாகியுள்ள மற்றொரு மசாலா படமே இந்த ‘தேவரா’.

Related posts