கூலி’ படப்பிடிப்பில்தான் ரஜினிகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ரஜினிகாந்த் நன்றாக இருக்கிறார். நேற்று இரவு கூட பேசினேன். இதுகுறித்து நானே விளக்கம் கொடுத்து விடலாம் என்று இருக்கிறேன்.
கிட்டத்தட்ட ஒரு மாதம் அல்லது 40 நாட்களுக்கு முன்பே, அதாவது விசாகப்பட்டினம் படப்பிடிப்பு திட்டமிடும் முன்னரே அக்.30-ம் தேதி ஒரு சின்ன சிகிச்சை இருக்கிறது என்று ரஜினி எங்களிடம் கூறியிருந்தார்.
ஏனென்றால் அவரைத் தாண்டி மற்ற மாநிலத்தை சேர்ந்த நடிகர்களின் தேதியும் முக்கியம் என்பதால் முன்கூட்டியே இந்த சிகிச்சை குறித்து சொல்லிவிட்டார். அதைவைத்துதான் நாங்கள் படப்பிடிப்பை திட்டமிட்டிருந்தோம்.
அதனால் 28-ம் தேதியே அவருடைய படப்பிடிப்பை முடித்து அனுப்பி விட்டோம். இந்த சிகிச்சை குறித்து முன்பே தெரிந்திருந்தாலும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சிலர் பேசுவதை பார்த்து நாங்களே பயந்துவிட்டோம்.
அவர்கள் சொல்வது போல படப்பிடிப்பில் ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் நாங்கள் ஒட்டுமொத்த படக்குழுவும் இங்கே மருத்துவமனை வாசலில்தான் நின்றிருப்போம்.
படப்பிடிப்பு நடத்திக் கொண்டு இருந்திருக்க மாட்டோம். ரஜினி எல்லாரும் கொண்டாடக்கூடிய ஒரு பிரபலம். அப்படி இருக்கும்போது சிலர் மிகவும் உறுதியாக எல்லாம் தெரிந்தது போல், பக்கத்தில் இருந்தது போல பேட்டிகளில் பேசுவது எங்களுக்கே பயம் கொடுத்தது.
ரஜினி எப்போதும் நன்றாக இருப்பார். ஆண்டவன் அருளால் அவருக்கு எதுவுமே ஆகாது. ஊடகங்களில் எழுதுவதை பார்க்கும்போது தான் பீதி ஆகிறது. நான் இதை வேண்டுகோளாகவே வைக்கிறேன். யாரையும் தயவுசெய்து பயமுறுத்தாதீர்கள்” இவ்வாறு லோகேஷ் கனகராஜ் கூறினார்.
ரத்தக் குழாயில் வீக்கம் இருந்ததால் நடிகர் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல், இடையீட்டு சிகிச்சை மூலம் அதனை சரி செய்ய திட்டமிடப்பட்டு ‘ஸ்டென்ட்’ கருவியை பொருத்தப்பட்டது. சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு இன்று திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.