மதம், சாதி சார்ந்து நடிகர் அஜித் பேசியிருக்கும் வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்புக்கு இடையே பல்வேறு மாநிலங்களுக்கு பைக்கில் பயணம் மேற்கொள்வதை பொழுதுபோக்காக வைத்துள்ளார் அஜித். அவருக்கு எப்போது எல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது எல்லாம் பைக்கில் கிளம்பிவிடுவது வழக்கம்.
இப்போது தனியார் டூர் நிறுவனம் ஒன்றின் வீடியோ பதிவில் அஜித் பேசியிருக்கிறார். அதில் தன் பயணம் சார்ந்த சில அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பதிவில் அஜித், “மதம் நீங்கள் இதுவரை சந்திக்காத மக்கள் மீது வெறுப்பைத் தூண்டும் என்று ஒரு வாசகம் உள்ளது. அது உண்மை தான். மதம், சாதி எதுவாக இருந்தாலும் சரி. மனிதர்களை சந்திக்காத முன்பே அவர்கள் மீதான தவறான மதிப்பீடுகளை செய்து விடுகிறோம்.
நீங்கள் பயணங்கள் மேற்கொண்டால் வெவ்வேறு தேசம், மதம், கலாசாரத்தைச் சேர்ந்த மக்களை காண்பீர்கள். இதன்மூலம், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும். பயணம் உங்களை நல்ல மனிதனாக்கும்” என்று தெரிவித்துள்ளார் அஜித்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனென்றால், நீண்ட வருடங்கள் கழித்து தனது படம் சாராத சமூக விஷயங்கள் குறித்து அஜித் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.