கருப்பு நிறம் கொண்ட நடிகர்களால் பாலிவுட்டில் தாக்குப்பிடிக்க முடியாது

பாலிவுட்டில் கருப்பு நிறம் கொண்ட நடிகர்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்று பலரும் என்னிடம் கூறினர். நான் கடவுளிடம், ‘கடவுளே என்னுடைய நிறத்தை மாற்றிவிடு’ என வேண்டினேன். இறுதியில் என் நிறத்தை மாற்ற முடியாது என்பதை உணர்ந்தேன்” என பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.

பாலிவுட்டின் மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு இந்திய திரைத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருதை புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

இதையடுத்து மேடையில் பேசிய நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, “நான் இந்த மேடையில் 3 முறை ஏறியிருக்கிறேன். முதல் தேசிய விருதை நான் பெற்றபோது பாராட்டுகளால் மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டேன். அது முழுமையாக என் கவனத்தை திசை திருப்பி விட்டது. என்னுடைய முதல் படமான ‘மிர்கயா’ படத்தில் நடித்து முடித்துவிட்டு சீனியர் நடிகரிடம் எப்படியிருக்கிறது என கேட்டேன். அவர் என் நடிப்பை பாராட்டினார். அதேசமயம் நான் சட்டை அணிந்திருப்பதை கற்பனையில் மட்டும் தான் நினைத்துப் பார்க்க முடியும் என்றார். அப்போது தான் நான் படத்தில் சட்டை இல்லாமல் நடித்ததை பற்றி யோசித்தேன்” என்று ஜாலியாக பேசினார்.

தொடர்ந்து தன்னுடைய திரைப்பயணத்தில் நிகழ்ந்த ஏற்ற இறக்கங்கள் குறித்து அவர் குறிப்பிடுகையில், “நான் ஹாலிவுட் நடிகர் அல் பசினோ போல ஆக நினைத்தேன். ஆரம்பத்தில் என்னை தயாரிப்பாளர்கள் நிராகரித்தார்கள். ஒரு தயாரிப்பாளர் என்னை அவரது அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினார். அன்று தான் என்னால் அல் பசினோ ஆக முடியாது என்ற உண்மை உரைத்தது. பாலிவுட்டில் கருப்பு நிறம் கொண்ட நடிகர்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்று பலரும் என்னிடம் கூறினர். நான் கடவுளிடம், ’கடவுளே என்னுடைய நிறத்தை மாற்றிவிடு’ என வேண்டினேன். இறுதியில் என் நிறத்தை மாற்ற முடியாது என்பதை உணர்ந்தேன். என்னுடைய நிறத்தை பார்வையாளர்கள் கவனிக்காத அளவுக்கு மாற நினைத்து, நடனத்தில் என்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினேன். அப்படித்தான் நான் கவர்ச்சியான டஸ்கி பெங்காலி பாபுவாக மாறினேன்” என்றார்.

மேலும், “எதுவும் எனக்கு அதுவாக கிடைத்துவிடவில்லை. எல்லாவற்றையும் என் கடின உழைப்பால் தான் நான் அடைந்தேன். என்னுடைய கஷ்டகாலங்கள் குறித்து நான் கடவுளிடம் அவ்வப்போது குறைப்பட்டுக் கொண்டே இருப்பேன். இந்த விருதை பெற்ற பின் நிம்மதியாக உணர்கிறேன். இனி கடவுளிடம் எனக்கு எந்த புகாரும் இல்லை. கனவு காண்பதை ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள். நீங்கள் உறங்கினாலும், உங்கள் கனவுகளை உறங்க விடாதீர்கள். என்னால் முடியும் என்றால் உங்களாலும் முடியும்” என்றார்.

Related posts