சாதகமான வளர்ச்சி பதிவாகி வருகிறது; ஆனால்

இலங்கையில் பொதுவாக நோக்குமிடத்து சாதகமான வளர்ச்சி நிலை தெரிகிறது. வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்துள்ளது. பணவீக்கம் குறைந்திருக்கிறது. வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்படவில்லை. தனியார் கடன்கள் அதிகரித்திருக்கின்றன. அரச வருமானமும் அதிகரித்திருக்கிறது. ஆனால், மறுபுறம் வறுமை அதிகரிப்பு உள்ளிட்ட சவாலான நிலையும் நீடிக்கிறது என்று உலக வங்கியின் இலங்கை குறித்த பொருளாதார நிபுணர் ஸ்ருதி லக்டகியா தெரிவித்தார்.

இலங்கையின் எதிர்கால வாய்ப்புகள் தொனிப்பொருளில் இலங்கை தொடர்பான புதிய அரையாண்டு அறிக்கை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் உள்ள உலக வங்கியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே உலக வங்கியின் இலங்கைக்கான பொருளாதார நிபுணர் ஸ்ருதி லக்டகியா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதில் பல துறைகள் பங்களிப்பு செலுத்துகின்றன. கட்டட நிர்மாணத்துறையில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி அதிகரித்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்னரான ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இன்னும் வளர்ச்சி தேவைப்படுகிறது. சேவைகள் துறை பங்களிப்பும் அதிகரித்திருக்கிறது. சுற்றுலாத்துறை மற்றும் அந்நிய செலவாணி வருகை என்பன அதிகரித்திருக்கின்றன. இந்த செயற்பாடுகள் காரணமாக நடைமுறை கணக்கு மீதி சாதகமாக பதிவாகி இருக்கின்றது.

அத்துடன் மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்துள்ளது. பணவீக்கம் குறைந்திருக்கிறது. வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்படவில்லை. தனியார் கடன்கள் அதிகரித்திருக்கின்றன. அரச வருமானமும் அதிகரித்திருக்கிறது. மொத்தமாக பார்க்கும்போது ஒரு முன்னேற்றம் காணப்படுகிறது. இது சாதகமான பக்கமாக இருக்கிறது.

ஆனால் மறுபுறம் வறுமை தொடர்ந்து அதிகரித்த மட்டத்தில் இருக்கிறது. பேரண்ட பொருளாதார வளர்ச்சி வறுமை குறைப்பில் தாக்கம் செலுத்தவில்லை. தொழிற்படை பங்களிப்பும் குறைவடைந்து இருக்கிறது. குடும்ப அலகு பட்ஜெட் அதிகரித்து இருக்கின்றது. சுகாதார மற்றும் கல்வித்துறைக்கான செலவுகள் குறைவடைந்து இருக்கின்றன.

பொருளாதார வளர்சசி 4.4 வீதமாக இவ்வருடத்தில் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான நிலைமையை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், வாகன இறக்குமதி அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படும்போது மேலும் டொலர் வெளிச்செல்கை அதிகரிக்கலாம்.

Related posts