தமிழரசு கட்சியிலிருந்து விலகினோம் ; கே.வி.தவராசா

தமிழரசுக் கட்சியிலிருந்து ஒரு சிலரின் நன்மைக்காக தமிழ் தேசியத்தை அழிப்பதை விரும்பாததன் காரணமாக தமிழரசு கட்சியிலிருந்து விலகி புதிய சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பை உருவாக்கினோம் என தமிழரசு கட்சியின் முன்னாள் கொழும்புக் கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.

சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பை உருவாக்கியதன் நோக்கம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசு கட்சி தமிழ் மக்களின் ஆணையிலிருந்து விலகி ஒரு சிலரின் ஏதேச்சை அதிகாரங்களுடன் செயல்பட்டு வரும் நிலையில் அந்தக் கட்சியிலிருந்து முதலாவதாக வெளியேறியவன் நான்.

நான் வெளியேறியமைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன அதனை மக்களுக்கு வெளிப்படையாகவே கூற விரும்புகிறேன்.

முதலாவதாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க எடுத்த தீர்மானம் கட்சியின் தீர்மானமாக கருத முடியாது.

ஏனெனில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வவுனியாவில் கலந்துரையாடலுக்கு வருமாறு அழைக்கப்பட்ட நிலையில் அங்கு கலந்துரையாடல் இடம்பெறவில்லை.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு வெள்ளை பேப்பரில் ஏதோ எழுதிக் கொண்டு வந்து சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தை எடுக்கிறோம் என அவர் தன்னுடைய தீர்மானத்தை கட்சியின் தீர்மானமாக தெரிவித்தார்.

நான் அதைப் பிழை எனக் கூறினேன். கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெறாமல் தீர்மானம் எடுக்கும் கூட்டமாக மாறியதால் நான் அது தவறு என சுட்டிக்காட்டி வெளியேறினேன்.

அடுத்ததாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்படதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த குழு கூடவும் இல்லை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடம் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஆராயவும் இல்லை கலந்துரையாடவும் இல்லை.

அது மட்டும் அல்லாது நல்லூர் ஆலய தேர்த்திருவிழா அன்று ஜனாதிபதி வேட்பாளர் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற மற்றொரு கூட்டம் அழைப்பு விடுக்கப்பட்டது தமிழரசு கட்சியைச் சேர்ந்த பல மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் தெரிவுத் தலைவர் வெளிநாட்டுக்குச் சென்றமை தெரிந்தும் வவுனியாவில் கூட்டம் கூட்டப்பட்டது.

தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான குழு கூடிய போது அதில் வேட்பாளராக சமூக ஊடகங்களில் தங்களை அறிமுகப்படுத்தியவர்கள் தெரிவுக் குழுவில் அங்கம் வகித்தமை முரணான விடயம்.

அது மட்டும் அல்லாது வேட்பாளர் தெரிவிக் குழுவில் மட்டக்களப்பில் இருந்து நான்கு பேரை நியமித்தார்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து எவரையும் நியமிக்கவில்லை நான் கொழும்புக்க் கிளை தலைவராக 14 வருடங்கள் இருக்கிறேன்.

இவ்வாறு திட்டமிட்ட முறையில் தமிழ் தேசியத்தை அழிப்பதற்காக சிலர் தெற்கு முகவர்களுடன் கைகோர்த்து தமிழரசு கட்சியை அழிப்பதை அதே கட்சியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

தமிழரசு கட்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் திசை மாறி சென்ற போது முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு பல தடவைகள் சுட்டிக் கட்டிய போதும் அவரால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியவில்லை.

நான் 14 வருடங்கள் தமிழரசு கட்சியில் அங்கம் வகித்தவன் என்ற நீதியில் காட்சியில் எந்த ஒரு பதவியையும் கேட்டுப் பெறவும் இல்லை பணம் சம்பாதிப்பதற்காக கட்சியைப் பயன்படுத்தியதும் இல்லை.

இரண்டு தடவைகள் என்னை தேசியப் பட்டியலில் போட்டார்கள் ஒரு தடவை எனக்குத் தெரியாமலே என்னை தேசியப் பட்டியலில் இருந்து நீக்கி ஒரு பெண்ணை புதிதாக அறிமுகப்படுத்தினார்கள் நான் கட்சியில் போர் கொடி தூக்கவில்லை.

இவ்வாறான நிலையில் தமிழரசு கட்சிக்குள் தெற்கு அரசியலை முழுமையாக புகுத்த வேண்டுமென சிலர் முழுமையாக செயல்பட்டு வரும் நிலையில் தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துக்காக கட்சியிலிருந்து வெளியேறினேன்.

எனது விலகல் சரி என நான் உணர்ந்து கொள்கிறேன் ஏனெனில் நான் விலகிய சில நாட்களுக்குள் தமிழரசு கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து வெளியேறினார்.

தமிழ் தேசியத்திற்காக மக்களிடம் ஆணையைப் பெற்று விட்டு தமிழ் மக்களை தெற்குக்கு அடகு வைக்கும் செயற்பாட்டை விரும்பாத தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக தமிழரசு கட்சியிலிருந்து விலகினார்கள் இன்னும் விலக உள்ளனர்.

புலம்பெயர் தமிழ் உறவுகள் மற்றும் தமிழரசு கட்சியின் ஆதரவு அணியினர் தமிழரசு கட்சியை விடுத்து புதிய ஜனநாயக தமிழ் அரசு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற இடைவிடாத கோரிக்கையின் காரணமாக தமிழரசு கூட்டமைப்பை உருவாக்கினோம்.

எமது தமிழரசு கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலில் தமிழரசு கூட்டமைப்பாகவே தேர்தலில் களம் இறங்கும்.

தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சனைக்கு முக்கியத்துவம் வழங்கி எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு மக்களின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து அபி விருத்தி நடவடிக்கைகளையும் முன்னோக்கி கொண்டு செல்ல உள்ளோம்.

அபிவிருத்தி முன்னெடுப்புகளில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை கோட்டுக்குட்பட்ட உட்பட்ட மக்களின் வாழ்வாதாரம், சுய தொழில் ஊக்குவிப்பு திட்டங்கள் என்பவற்றை கட்டி எழுப்புவது எமது பிரதான நோக்கமாக காணப்படுகிறது.

நமது கட்சியை வலுப்படுத்துவதற்காக தமிழரசு கட்சியில் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் தமிழரசு கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஆகியோரிடம் இணைந்து பயணிக்க உள்ளனர்.

அது மட்டுமல்லாது பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் மற்றும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளில் பயணிப்பவர்கள் நம்முடன் இணைப்பதற்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே தமிழரசு கட்சி வீட்டு சின்னம் அழிந்துவிட்டது எனவே தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்தில் எம்முடன் இணைந்து பயணிக்க விரும்பினால் ஒரே மேசையில் இருந்து பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் தமிழரசு கூட்டமைப்பின் செயலாளர் அகிலன் முத்துக்குமாரும் கலந்து கொண்டார்.

Related posts