தமிழில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார் அம்ரித் ராம்நாத். பிரபல கர்நாடக இசைப் பாடகி, பாம்பே ஜெயஸ்ரீ-யின் மகன். பல சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ள இவர், மலையாளத்தில் வெளியான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்துக்கு ஏற்கெனவே இசை அமைத்திருக்கிறார்.
“இசை அமைப்பாளரா ஆகணுங்கற ஆசை, சின்ன வயசுலயே எனக்குள்ள இருந்தது. எப்பவும் இசைக்காக அதிகநேரத்தை செலவழிச்சேன்.
கர்நாடக இசையையும் மேற்கத்திய இசையையும் கத்துக்கிட்டேன். அம்மா கூட நானும்பாடப் போவேன். ஸ்கூல் படிப்பை முடிச்சதும் முழுசா மியூசிக் பயிற்சிகள்ல இறங்கிட்டேன்.
இசை அமைப்பாளரா ஆகணும்னா, அதுக்கு என்ன மாதிரி உழைப்பு தேவை, அதை எப்படி பண்றதுன்னு நானாகவே தெரிஞ்சுகிட்டேன். அம்மா எப்போதும், ‘என்ன பண்ணினாலும் நீ நீயாகத்தான் இருப்பே, நான் நானாகத்தான் இருப்பேன்’னு சொல்வாங்க. அதோட ‘எதையும் நேர்மையா பண்ணினா அதுக்கான இடம் கிடைக்கும்’னும் சொல்லுவாங்க. அதை கடைபிடிச்சுதான், ஆல்பங்கள் பண்ணினேன். இதுவரை 25 ஆல்பங்கள் பண்ணியிருக்கிறேன்” என்று ஆரம்பிக்கிறார், அம்ரித் ராம்நாத்.
மலையாளப் படமான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ வாய்ப்பு எப்படி கிடைச்சது?
என்னோட ‘மனசே’ உட்பட சில சுயாதீன பாடல்களை நடிகரும் இயக்குநருமான வினித் சீனிவாசன் கேட்டிருக்கார். அதைக் கேட்டுட்டு, நான் இசை அமைச்சபாடல்களைப் போட்டுக் காட்டச் சொன்னார். அதைக் கேட்டதும், ‘என்னோட படத்துக்கு உங்க இசை கண்டிப்பா பயன்படும், சினிமாவுக்கு இசை அமைக்க விருப்பம் இருக்கா?’ன்னு கேட்டார். நிச்சயமா இருக்குன்னு சொன்னேன். அப்படித்தான் அந்த வாய்ப்பு கிடைச்சது.
இசைக்கு முக்கியத்துவம் கொண்ட படம் அது… கதையே கொஞ்சம் அது மாதிரிதான். சவாலா இருந்ததா?
உண்மைதான். படத்துல 9 பாடல்கள். பின்னணி இசைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்த படம். எனக்கு என் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாகவும் நல்ல அனுபவமாகவும் இருந்தது. அதுக்கு வினித் சீனிவாசனுக்கு நன்றி சொல்லணும். ஒரு முதல் பட இசை அமைப்பாளருக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்தது பெரிய விஷயம்.
சித்தார்த்தின் 40-வது படம் மூலமா தமிழ்ல அறிமுகமாகறீங்க…
ஆமா. இந்தப் படத்தோட கதை ரொம்ப அழகானது. எனக்கு ‘கனெக்ட்’ ஆகற மாதிரியான கதை. இந்தப் படத்துக்கு முன்னாலயே நடிகர் சித்தார்த் என் பாடல்களை கேட்டிருக்கார். அம்மாவோட பாடல்களும் அவருக்குப் பிடிக்கும். இந்தப் படத்துக்காக சில இசை முயற்சிகளை பண்ணப் போறேன். இப்பதான் அது பற்றி பேசிட்டிருக்கோம். என் முதல் தமிழ் படத்து இசை, மக்களுக்குப் பிடிச்சா அது எனக்கு மகிழ்ச்சியா இருக்கும்.
பொதுவா பின்னணி இசை அமைக்கிறதுதான் கஷ்டம்னு சொல்வாங்க…
கஷ்டம்னு எதையும் சொல்ல மாட்டேன். எனக்கு என்னன்னா, ‘லைவ் ஆர்கெஸ்ட்ரேஷன்’தான் பிடிக்கும். அதனால பின்னணி இசையும் பாடல்களுக்கு இசை அமைக்கிறதும் ரொம்ப பிடிச்ச விஷயம். ‘வர்ஷங்களுக்கு சேஷம்’படத்துக்கு கூட ஹங்கேரி போய் ‘லைவ் ரெக்கார்டிங்’ பண்ணிட்டு வந்தேன்.
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இப்ப அனிருத்… உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?
இளையராஜா சார் இசை, கற்பனை செய்ய முடியாததா இருக்கும். பாடல்கள் வெளியாகி பல வருஷமானாலும் இப்பவும் அவர் பாடல்கள் நம்மை ஏதோ பண்ணுது. ஏ.ஆர்.ரஹ்மான் சார் பல எல்லைகளைக் கடந்திருக்கார். அனிருத் பாடல்கள்ல ஏதோ இருக்கறதாலதான் ரசிகர்கள் கொண்டாடுறாங்க. ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒவ்வொரு தனித் திறமைஇருக்கு. யாரையும் ஒப்பிட வேண்டாம். என்னைப் பொருத்தவரை நான் என் எமோஷனை வச்சுதான் இசையமைப்பேன். என் இசைங்கறது என்னை பிரதிபலிக்கிறதுதான்.