இனிமேல் பா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன். யாரையும் உள்ளே வர விடமாட்டேன். இது என்னுடைய கட்டளை” என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூது கவ்வும் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட சந்தோஷ் நாராயணன் கூறுகையில், “அட்டக்கத்தி படம் வருவதற்கு முன்பிருந்தே எனக்கு அறிமுகமானவர் மிர்ச்சி சிவா.
எங்கள் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உண்டு. ‘அட்டக்கத்தி’ படம் உருவாகும்போது, ‘எனக்கு உன் மியூசிக் பிடிக்கல’ என்று பா.ரஞ்சித் கூறினார். அதன்பிறகு கிராமிய இசை மீது கவனம் செலுத்த சொன்னார். என்னை உருவாக்கியதில் பா.ரஞ்சித்துக்கு பங்கு உண்டு. பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், நலன் குமாரசாமி, இவர்களுடன் பணியாற்றிய என்னுடைய முதல் 3 படங்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.
3 இயக்குநர்கள் வெவ்வேறு குணாதியசங்கள் கொண்டவர்கள். ‘சூது கவ்வும்’, ‘கடைசி விவசாயி’ ஆகிய இரண்டு படங்களையும் நான் எப்போது பார்க்க ஆரம்பித்தாலும் முழுமையாக பார்த்துவிடுவேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள். நலனை பிடித்து வைத்திருக்கிறேன். அவரது அடுத்த படத்துக்கு நான் இசையமைப்பேன் என்று கூறிவிட்டேன். அதேபோல, பா.ரஞ்சித்தின் இனிவரும் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன். யாரையும் உள்ளே வர விடமாட்டேன். இது என்னுடைய கட்டளை” என தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித்துடன் தொடக்கத்திலிருந்து பயணித்து வந்தவர் சந்தோஷ் நாராயணன். இடையில் அவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக இருவரும் பணியாற்றாமல் இருந்தனர். இந்த நிலையில் சந்தோஷ் நாராயணனின் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.