ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று (டிச.14) சென்னையில் காலாமானார்.
குடும்ப பின்னணி: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் (76) இருந்தார். அவர் சனிக்கிழமை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பெரியாரின் பேரனான இளங்கோவனின் தந்தை ஈ.வே.கி.சம்பத், தாயார் சுலோச்சனா சம்பத். இவரது மனைவி வரலட்சுமி இளங்கோவன், மகன்கள் திருமகன் ஈவெரா (மறைவு), சஞ்சய் சம்பத். பி.ஏ.பொருளாதார பட்டப்படிப்பு படித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் மாணவரணி செயலாளர், ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு நகர காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
வகித்த பதவிகள்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்த இளங்கோவன் 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்தார். பின்னர் 2003-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக பதவி வகித்தார். 2-வது முறையாக 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவியை வகித்தார்.1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு கோபி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
இடைத்தேர்தலில் வெற்றி: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா கடந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தேர்தலின்போது என் மகன் விட்டுச்சென்ற பணியைத் தொடர்வதற்காக இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
அவருக்கு ஆதரவாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஏராளமான அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுவைத் தவிர, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் வகித்த பதவிகள்
1984-87–எம்.எல்.ஏ. (சத்தியமங்கலம் தொகுதி)
1998-2000 – பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
2000 – 2002 – தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
2002 – 2003 – செயல் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
2004 – மக்களவை உறுப்பினர் (கோபி தொகுதி)
2004 – 2009 – மத்திய இணையமைச்சர்
2015- 16 – தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
கடந்த 2009-ம் ஆண்டு ஈரோடு தொகுதியிலும், 2014-ம் ஆண்டு திருப்பூர் மக்களவைத் தொகுதியிலும், 2019-ம் ஆண்டு தேனி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.